கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிடத் தொடங்கியவன் — மேலிருந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஹதீஸ் சம்பவங்கள்

“கையைப் பிடித்தால் இருவரும் தப்பிப்பார்கள்; விட்டுவிட்டால் இருவரும் மூழ்குவார்கள்”

مَثَلُ المُدْهِنِ فِي حُدُودِ اللَّهِ، وَالوَاقِعِ فِيهَا، مَثَلُ قَوْمٍ اسْتَهَمُوا سَفِينَةً، فَصَارَ بَعْضُهُمْ فِي أَسْفَلِهَا وَصَارَ بَعْضُهُمْ فِي أَعْلاَهَا، فَكَانَ الَّذِي فِي أَسْفَلِهَا يَمُرُّونَ بِالْمَاءِ عَلَى الَّذِينَ فِي أَعْلاَهَا، فَتَأَذَّوْا بِهِ، فَأَخَذَ فَأْسًا فَجَعَلَ يَنْقُرُ أَسْفَلَ السَّفِينَةِ، فَأَتَوْهُ فَقَالُوا: مَا لَكَ، قَالَ: تَأَذَّيْتُمْ بِي وَلاَ بُدَّ لِي مِنَ المَاءِ، فَإِنْ أَخَذُوا عَلَى يَدَيْهِ أَنْجَوْهُ وَنَجَّوْا أَنْفُسَهُمْ، وَإِنْ تَرَكُوهُ أَهْلَكُوهُ وَأَهْلَكُوا أَنْفُسَهُمْ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் சட்டங்களில் விட்டுக் கொடுப்பவரும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின் நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின் கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அதனால் மேல் தளத்திலிருந்தவர்கள் துன்பமடைந்தார்கள். எனவே, கீழ்த் தளத்தில் இருந்த ஒருவன் ஒரு கோடரியை எடுத்து, கப்பலின் கீழ்த் தளத்தைத் துளையிடத் தொடங்கினான். மேல் தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, ‘உனக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். அவன், ‘நீங்கள் என்னால் துன்பத்திற்குள்ளானீர்கள். எனக்குத் தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. (அதனால், கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்தித் கொள்வேன்)’ என்று கூறினான்.

(துளையிட விடாமல்) அவனுடைய இரண்டு கைகளையும் அவர்கள் பிடித்தால் அவர்கள் அவனையும் காப்பாற்றுவார்கள்; தங்களையும் காப்பறிக் கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில் துளையிட) விட்டுவிட்டால் அவனையும் அழித்து விடுவார்கள்; தங்களையும் அழித்துக் கொள்வார்கள். என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர் (ரலி)

நூல் – (புகாரி: 2686)

தவறு செய்பவனுக்கு அவனுடைய நியாயம் இருக்கும் — “எனக்குத் தண்ணீர் வேண்டும்” என்றான். நியாயம் இருப்பதால் அது பாதுகாப்பானது ஆகிவிடாது.

மவுனமாக இருப்பது நடுநிலை அல்ல; அது கப்பலோடு மூழ்குவதற்கு ஒப்புதல் கொடுப்பதாகும்.