பென்சீன் என்றால் என்ன?

அறிவியல் உண்மைகள்

பென்சீன் (Benzene) என்பது மருத்துவம், சாயங்கள், பிளாஸ்டிக், சலவை, பூச்சிக்கொல்லி, நறுமணப் பொருள்கள், வெடிப்பொருள்கள் எனப் பலவற்றிலும் பயன்படும் ஒரு வேதிப்பொருள். இது நவீன கரிம வேதியியலின் (Organic Chemistry) வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது.

மின்காந்தவியலின் தந்தை என அறியப்படும் மைக்கல் ஃபாரடே (Michael Faraday) 1825-ஆம் ஆண்டு பென்சீனைக் கண்டறிந்தார். நிலக்கரி மற்றும் திமிங்கில எண்ணெயைச் சூடாக்கி விளக்குகளுக்கு எரிபொருள் தயாரிக்கும்போது உருவான எண்ணெய்க் கழிவுகளை ஆராய்ந்தபோது, ஃபாரடே நிறமற்ற ஒரு ஹைட்ரோகார்பன் பொருளைப் பிரித்தெடுத்தார். இதற்கு ‘பை-கார்புரெட் ஆஃப் ஹைட்ரஜன்’ (bi-carburet of hydrogen) என்று பெயரிட்டார். இதுவே பின்னாளில் பென்சீன் என அறியப்பட்டது.

சார்லஸ் மேன்ஸ்ஃபீல்ட் (Charles Mansfield) என்பவர் நிலக்கரிக் கழிவான தாரில் இருந்து பென்சீனைப் பிரித்தெடுக்கும் முறையை உருவாக்கினார். பென்சீன் ஒரு சிறந்த கரைப்பானாகச் செயல்பட்டு, துணிகளில் படிந்த எண்ணெய், கொழுப்பு, மெழுகு போன்ற கறைகளை நீக்கியதால், சலவைத் தொழிலில் பரவலாகப் பயன்படத் தொடங்கியது.

1856-ஆம் ஆண்டு வில்லியம் ஹென்றி பெர்கின் (William Henry Perkin) என்பவர் மலேரியா சிகிச்சைக்குப் பயன்படும் குயினீனை (Quinine) செயற்கையாக உருவாக்க முயன்றார். பென்சீன் குடும்பத்தைச் சேர்ந்த அனலின் (Aniline) போன்ற கரிமச் சேர்மங்களைப் பயன்படுத்தி அவர் குயினீனை உருவாக்க முடியாவிட்டாலும், ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டறிந்தார். இதற்கு ‘மோவீன்’ (mauveine) எனப் பெயரிட்டார்.

மோவீன் வணிகரீதியாகத் தொழிற்சாலைகளில் பயன்பட்ட முதல் செயற்கைச் சாயம் ஆகும். அதுவரை விலங்குகள் மற்றும் தாவரங்களில் இருந்து கிடைத்த சாயங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்தினர். மோவீனின் கண்டுபிடிப்பு ஜவுளித் தொழில்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

பென்சீனின் மூலக்கூறு கட்டமைப்பு (Molecular Structure) பலகாலம் புதிராகவே இருந்தது. ஹைட்ரோகார்பன்களில் கார்பனைவிட அதிக ஹைட்ரஜன் அணுக்கள் இருப்பதே வழக்கம். ஆனால், பென்சீனில் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்கள் இரண்டும் 6:6 என்ற விகிதத்தில் சமமாக இருந்தன.

பெல்ஜியத்தைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியர் ஆகஸ்ட் கெகுலே (August Kekulé) பென்சீனின் கட்டமைப்பைக் கண்டறிந்தார். ஒருநாள் கனவில் அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து பாம்பைப் போலச் சுருண்டு தன் வாலையே கடித்தது போல ஒரு வளைய வடிவத்தைக் கண்டார். இந்த கனவின் மூலம் பென்சீனின் வேதியியல் அமைப்பு ஒரு வளைய வடிவம் கொண்டது என்பதை அவர் புரிந்துகொண்டார்.

கெகுலேவின் இந்தக் கண்டுபிடிப்பு கரிம மூலக்கூறுகளின் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைந்தது. இது ‘அரோமேட்டிக் வேதியியல்’ (Aromatic Chemistry) என்ற புதிய பிரிவுக்கு அடித்தளமிட்டது. பென்சீனை மாற்றி அமைப்பதன் மூலம் மருந்துகள், செயற்கை இனிப்பூட்டிகள், வாசனைத் திரவியங்கள் போன்ற பல வேதிப்பொருள்களைத் தயாரிக்க முடிந்தது. சாக்ரின் (Saccharin) என்பது இவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு வேதிப்பொருள்.

கரிம வேதியியல் என்பது கார்பன் மூலக்கூறுகளை ஆராயும் பிரிவு. பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் வேதியியலுக்கும் கார்பனே அடிப்படை. பென்சீனின் கண்டுபிடிப்பு, நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் அவற்றை உருவாக்கிய மூலக்கூறுகளைப் புரிந்துகொள்ள உதவியது. இத்தகைய அறிவியலின் மூலம் இறைவன் படைத்த இந்த உலகத்தின் நுட்பமான ஒழுங்கையும், அவனது அளவற்ற ஞானத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்கிறோம்.

ஆதாரம்: இந்து தமிழ் திசை