நாம் முடிவு செய்வதற்கு முன்பே மூளை செயல்படுகிறதா?
ஒருவர் ஒரு செயலைச் செய்ய முடிவெடுப்பதற்கு முன்பே, அவரது மூளை அந்தச் செயலுக்கான ஆணையை உருவாக்கிவிடுகிறது. இது மூளையின் வியப்பான செயலாகும்.
ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சமூக உறவுகள் தொடர்பான மூளைச் செயல்பாடுகளில் புதிய ஆய்வு ஒன்றை நடத்தினர். ஒருவர் மற்றொருவரை அணுகிச் செல்லும் முடிவை எடுப்பதற்கு பல வினாடிகள் முன்னரே, மூளையில் உள்ள ஒரு தனித்துவமான பகுதியில் நரம்பியல் செயல்பாட்டு வடிவம் தோன்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்விற்காக, விஞ்ஞானிகள் “ஜீப்ரா மீன்” (Zebrafish) எனப்படும் சிறிய வகை மீனைத் தேர்ந்தெடுத்தனர். வெளிப்படையான உடலமைப்பைக் கொண்ட இந்த மீன், மூளையின் ஒவ்வொரு செல்லின் செயல்பாட்டையும் நேரடியாகக் கண்காணிக்க உதவியது. ஒரு மீன் அருகில் நீந்திக் கொண்டிருக்கும்போது, அதை நோக்கி நகர உள்ள மற்றொரு மீன் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.
ஆய்வின்போது ஒரு வியப்பூட்டும் உண்மை வெளிப்பட்டது. மூளையின் உயர்நிலைச் செயல்பாடுகள் மற்றும் சிக்கலான நடத்தைகளுடன் தொடர்புடைய ‘பாலியம்’ (Pallium) எனப்படும் பகுதியில் செயல்பாடு அதிகரித்தது. அதேநேரத்தில், சில பிற பகுதிகளில் செயல்பாடு குறைந்தது. இந்த மாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து, ஒரு சமூகச் செயல் பிறக்கப் போகிறது என்பதை முன்னரே அறிவிக்கும் மௌனச் சைகையாக அமைந்தன.
இந்த உயர்வும் தாழ்வும் ஒன்றாக இணைந்து “முன்-முடிவு நிலை” (Pre-Decision State) எனப்படும் ஒரு மூளை நிலையை உருவாக்கின. ஒரு மீன் மற்றொரு மீனை நோக்கி நீந்தத் தொடங்குவதற்கு முன்பே, அதன் மூளையில் ஒரு “முன்-முடிவு நிலை” உருவாகிறது. இந்த நரம்பியல் வடிவத்தைப் பார்த்து, அந்த மீன் விரைவில் சமூக ரீதியாக மற்றொரு மீனை அணுகப்போகிறதா என்பதை முன்கூட்டியே கணிக்கவும் முடிந்தது.
இந்த ஆய்வை டாக்டர் லைலாக் அவிட்டன் தலைமையில் அவரது ஆய்வகத்தில் பணியாற்றிய முனைவர் பட்ட ஆய்வாளர் இம்ரி லிஃப்ஷிட்ஸ் மற்றும் குழுவினர் மேற்கொண்டனர். ஜீப்ரா மீனின் மூளை வெளிப்படையாக வெளியிலிருந்தே பார்க்க முடிவதால், அதன் ஒவ்வொரு நரம்பு உயிரணுவின் செயல்பாட்டையும் நேரடியாகக் கண்காணிக்க முடிந்தது. இதனால் சமூக முடிவுகள் உருவாகும் தருணங்களை உயிரோடு பதிவு செய்யும் அரிய வாய்ப்பு ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தது.
இந்த நரம்பியல் கையொப்பத்தின் வலிமை ஒவ்வொரு மீனிடமும் வெவ்வேறு விதமாக இருந்தது. அதிக வலிமையுடன் இந்த மூளை அலைகளை வெளிப்படுத்திய மீன்கள், இயல்பாகவே அதிக சமூக உணர்வும், பழகும் விருப்பமும் கொண்டிருந்தன. இது ஒரு குறிப்பிட்ட பகுதியின் செயல்பாடு மட்டும் அல்ல; பல பகுதிகள் இணைந்து உருவாக்கிய ஒருங்கிணைந்த நரம்பியல் அலை.
மூளையில் இந்தச் சிக்னல் மிகவும் வலிமையாகக் காணப்பட்ட மீன்கள், பொதுவாக அதிக சமூகத் தன்மை கொண்டவையாக இருந்தன. அவை மற்ற மீன்களுடன் அதிகமாகப் பழகவும், நெருங்கிச் செல்லவும் விரும்பின. இந்த நரம்பியல் செயல்பாடு வெறும் ஒரு செயலின் முன்னறிவிப்பாக மட்டுமல்லாமல், அந்த உயிரினத்தின் அடிப்படை சமூக உந்துதலின் அளவையும் பிரதிபலிக்கிறது என்பது தெரியவந்தது.
இந்தக் கண்டுபிடிப்பு, ஏன் சிலர் இயல்பாகவே மக்களுடன் எளிதில் பழகுகிறார்கள், சிலர் அமைதியான தனிமையை விரும்புகிறார்கள் என்ற கேள்விகளுக்கு புதிய வெளிச்சம் தரக்கூடும். மனிதனின் சமூகப் பயணம் கால்கள் நகரும் தருணத்தில் தொடங்குவதில்லை; அது அதற்கு முன்பே, நமது எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட மூளையின் அமைதியான அரங்கில் விதைக்கப்பட்டு உருவாகிப் பிறக்கிறது என்ற உண்மை இந்த ஆய்வின் மூலம் வெளிப்படுகிறது.
இறைவன் தனது படைப்பில் எவ்வளவு நுட்பமான அமைப்புகளை வைத்துள்ளான் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. நாம் அறியாத பல ரகசியங்களை மூளைக்குள் வைத்து, ஒவ்வொரு செயலையும் அவன் திட்டமிட்டுள்ளான். இவை அனைத்தும் இறைவனின் அளவற்ற ஞானத்தையும் ஆற்றலையும் பறைசாற்றுகின்றன.
ஆதாரம்: தினமணி