வியாழன் மற்றும் சனிக்கு ஏன் அதிக நிலவுகள்?
சர்வதேச வானியல் ஒன்றியத்தின் பட்டியலின்படி, ஜனவரி 2026இல் வியாழன் கோளுக்கு 95 நிலவுகளும், சனிக்கோளுக்கு 146 நிலவுகளும் உள்ளன. நம் பூமிக்கு ஒரே ஒரு நிலவு. வெள்ளி, புதன் கோள்களுக்கு நிலவு ஏதுமில்லை.
ஒரு கோள், துணைக்கோள்களை (நிலவு) மூன்று விதங்களில் பெறுகிறது. முதலாவது, கோள் உருவாகும்போதே அதனுடன் சேர்ந்து உருவாவது. இப்படித்தான் வியாழன் கோளின் பெரிய நிலவுகளான ஐயோ (Io), யூரோபா (Europa), கனிமீட் (Ganymede), காலிஸ்டோ (Callisto) போன்றவை உருவாயின. இவை வியாழன் கோள் உருவான அதே கோள்திரள் தட்டில் திரண்டு உருவானவை. கோளின் இளமைக் காலத்தில் ஒரு பெரிய வான்பொருள் மோதி, அதில் இருந்து தெறித்த துண்டுகள் திரண்டு, கோளைச் சுற்றி வலம்வரலாம். இவ்வாறுதான் பூமியின் நிலவு உருவானது எனக் கருதப்படுகிறது.
மூன்றாவது வகை, தற்செயலாக வானில் அருகே செல்லும் ஒரு வான்பொருளை, கூடுதல் ஈர்ப்பு ஆற்றல் கொண்ட கோள்கள் இழுத்துக்கொள்ள முடியும். இப்படித்தான் வியாழன் கோளின் தொலைவில் வெளிப்புறமாக உள்ள பல நிலவுகள் உருவாயின எனக் கருதப்படுகிறது.
கோளுடன் சேர்ந்து உருவாகும் நிலவுகள், கோள் தன்னைத்தானே சுற்றும் அதே தளத்திலும், அதே திசையிலும் சுற்றிவரும். அவற்றின் சுற்றுக் காலங்கள் ஒத்திசைவுடன் இருக்கும். இதைச் ‘சுற்றுப்பாதை ஒத்திசைவு’ (Orbital Resonance) என்பர். எடுத்துக்காட்டாக, ஐயோ ஒருமுறை வியாழனைச் சுற்றிவரும் அதே கால அளவில், யூரோபா இரண்டு முறையும், கனிமீட் நான்கு முறையும் சுற்றிவரும்.
வேறு எங்காவது பிறந்து, வியாழனின் பிடியில் சிக்கிக்கொண்டு, துணைக்கோளாக மாறிய பொருள்களின் பாதையில் வேறுபாடு தென்படும். அவற்றின் சுற்றுத் திசை, கோளின் சுற்றுத் திசைக்கு எதிர்ப்புறமாக அமையலாம். அவற்றின் பாதை சாய்ந்து காணப்படலாம். எனவேதான், வியாழன் கோளின் வெளிப்புற நிலவுகள் வேறு எங்கோ பிறந்து, வியாழனின் பிடியில் சிக்கிக்கொண்டவை எனக் கருதப்படுகின்றன.
ஒரு கோளின் ஈர்ப்பு விசை மேலோங்கி இருக்கும் பகுதியை ‘ஹில் பகுதி’ (Hill sphere) என்பர். நிலவின் அளவே உள்ள புதன் கோளின் ஹில் பகுதி வெறும் 1.75 லட்சம் கி.மீ. மட்டுமே. எனவேதான் புதன் கோளுக்கு நிலவே இல்லை. பூமியின் ஹில் பகுதி 14.7 லட்சம் கி.மீ. எனவேதான், 3.8 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள நிலா பூமியின் பிடியில் உள்ளது.
பூமியைவிட 318 மடங்கு கூடுதல் நிறை கொண்டுள்ள வியாழன் கோள், சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற அனைத்துக் கோள்களின் மொத்த நிறையைவிட 2.5 மடங்கு அதிக நிறை கொண்டது. ஒரு கோளின் நிறையைப் பொறுத்து அதன் ஈர்ப்புப் புலம் அமையும். எனவே, வியாழனின் ஹில் பகுதி 505 லட்சம் கி.மீ. வரை பரந்துள்ளது. இதன் விளைவாக, வியாழன் கோளால் கூடுதல் வான்பொருள்களைக் கவர்ந்து துணைக்கோள்களாக மாற்றிவிட முடிகிறது.
சூரியனிடம் இருந்து உள்ள தொலைவும் கோளின் நிறையும் சேர்ந்து ஹில் பகுதியின் விரிவைத் தீர்மானிக்கின்றன. வியாழன் கோளைவிட வெகு தொலைவில் சனிக்கோள் உள்ளதால், அங்கே சூரியனின் ஈர்ப்புப் புலம் குறைவாக உள்ளது. எனவேதான், சனிக்கோளின் ஹில் பகுதி 616 லட்சம் கி.மீ. இது வியாழன் கோளைவிடக் கூடுதலானது. எனவேதான், சனிக்கோள் 146 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.
இறைவன் படைத்த இந்த அண்டத்தின் ஒவ்வொரு கோளும், அதன் நிலவுகளும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குடன் இயங்குகின்றன. இந்த வியத்தகு படைப்பில், இறைவனின் அளவற்ற ஆற்றலையும், நுட்பமான திட்டமிடலையும் நாம் காணலாம்.
ஆதாரம்: இந்து தமிழ் திசை