அடகு வைத்தல் கூடுமா?

கேள்வி-பதில்: பொருளாதாரம்

அடைமானம் வைப்பதும், வாங்குவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான். இதில் சந்தேகம் எதுவுமில்லை. ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது நம்மை அவர் ஏமாற்றி விடாமலிருக்க நம்பிக்கைக்காக ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

கொடுத்த கடனுக்கு உத்திரவாதமாகத் தான் அடைமானம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரிடம் ஒரு நகையை அடைமானமாகப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்தால், அந்த நகையை நாம் பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வீட்டை அடைமானமாகப் பெற்றாலும் இது தான் நிலை.

வீட்டை அடைமானமாகப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்து விட்டு அந்த வீட்டில் நாம் குடியிருந்தால் – அதாவது வாடகை கொடுக்காமல் குடியிருந்தால் – கொடுத்த கடனுக்கு வட்டியாகவே அது கருதப்படும்.

வீட்டை அடமானமாகப் பெற்ற பிறகு அதில் நாம் குடியிருக்கக் கூடாது. குடியிருந்தால் அதற்கான வாடகையைக் கொடுத்து விட வேண்டும்.

கால்நடைகளை அடமானமாகப் பெற்றால் அதற்கு தீனி போட்டு வளர்ப்பதால் அதில் சவாரி செய்யலாம். பால் கறந்து எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன.

இந்த விதிமுறையை மீறாமல் அடைமானம் வைக்கலாம்; வாங்கலாம்.

2511 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ: الرَّهْنُ يُرْكَبُ بِنَفَقَتِهِ، وَيُشْرَبُ لَبَنُ الدَّرِّ إِذَا كَانَ مَرْهُونًا

அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவன்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின், அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 2511, 2512)

2068 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ، الرَّهْنَ فِي السَّلَمِ، فَقَالَ: حَدَّثَنِي الأَسْوَدُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ

போர்க்களத்தில் அணிந்து கொள்ளும் தமது கவசத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் அடகு வைத்துள்ளார்கள்.

(புகாரி: 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467)