16) இறைவனின் வாக்குறுதி

நூல்கள்: அஹ்லே குர்ஆன் கூட்டத்தாரின் தவறான வாதங்களும் தக்க பதில்களும்

“எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)” என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலைநாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.

(அல்குர்ஆன்: 8:7)

இறைவனால் தூதர்களாக நியமிக்கப்படுவோருக்கு வேதத்தை மட்டும் இறைவன் வழங்குவதில்லை. மாறாக வேதம் அல்லாத வேறு செய்திகளையும் அவர்களுக்கு இறைவன் அறிவிப்பான். வேதத்தில் எழும் சந்தேகங்களுக்கான விளக்கத்தையும் தூதர்களுக்கு வழங்குவான் என்பதற்கு ஏராளமான சான்றுகளை இத்தொடரில் நாம் கண்டு வருகின்றோம்.

மேற்கண்ட வசனமும் இது போன்ற கருத்தைத் தரும் மற்றொரு வசனமாகும்.

இவ்வசனம் நேரடியாகக் கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவிய பின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாக பயணம் செய்து வந்தனர்.

தமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னிய நாட்டவர் தமது நாட்டுக்குள் அத்துமீறி பிரவேசிப்பதைத் தடுக்கத் திட்டமிட்டார்கள். குறிப்பாக முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு ஊரை விட்டே விரட்டியடித்த மக்காவாசிகள் தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுத்தாக வேண்டும் என நினைத்தார்கள்.

நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தத் தலைவரும் செய்வது போலவே தமது நாட்டுக்குள் புகுந்து பயணம் மேற்கொள்பவர்களைத் தடுத்து நிறுத்தவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பித்தார்கள்.

இந்த நிலையில் தான் மக்காவின் முக்கியப் பிரமுகரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமனாருமான அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் அதிகமான சரக்குகளுடன் தமது நாட்டுக்குள் புகுந்து பயணித்துக் கொண்டிருக்கும் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது.

எனவே அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்காக தமது தலைமையில் படை நடத்திச் சென்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணிகக் கூட்டத்தின் வர்த்தகப் பொருட்களைப் பறிமுதல் செய்ய வரும் செய்தி வணிகக் கூட்டத்தின் தலைவரான அபூஸுஃப்யானுக்குத் தெரிந்தது. உடனே அபூஸுஃப்யான் தம்மையும் தமது வர்த்தகப் பொருட்களையும் காப்பாற்ற படையெடுத்து வருமாறு மக்காவுக்குத் தகவல் அனுப்பினார்.

இத்தகவலுக்குப் பின் மக்காவிலிருந்து சுமார் ஆயிரம் பேர் கொண்ட பெரும் படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டு வந்தது.

வர்த்தகக் கூட்டத்தை வழிமறித்து பறிமுதல் செய்வதா? அல்லது எதிர்த்து வரும் எதிரிகளுடன் போர் செய்வதா? என்ற குழப்பமான நிலை நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. வணிகக் கூட்டத்தை வழிமறித்தால் அதிகம் இரத்தம் சிந்தாமல் அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்பதாலும் அவர்களின் பொருட்களைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பதாலும் அதைத் தான் பெரும்பாலோர் விரும்பினார்கள்.

எதிரிகளின் படையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலேயே தங்கள் படைபலம் இருந்ததால் போரை விட வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள். வணிகக் கூட்டத்தை வழிமறித்து பொருட்களைப் பறிமுதல் செய்தால் இத்தகவல் கிடைத்ததும் மக்காவிலிருந்து படை திரட்டி வந்தவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள் என்றும் கணக்குப் போட்டனர்.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைக் களத்தில் சந்திப்பதையே தேர்வு செய்தார்கள். எதிரிகளை “பத்ர்’ என்னும் இடத்தில் எதிர்கொண்டு மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள்.

இந்நிகழ்ச்சி தான் இவ்வசனத்தில் கூறப்படுகின்றது. இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தை நீங்கள் வெல்வீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

வணிகக் கூட்டம்

அவர்களைக் காப்பாற்ற வந்த மக்காவின் இராணுவம்

இவ்விரண்டில் ஒன்றை நீங்கள் வெற்றி கொள்வீர்கள் என்று முன்னரே அல்லாஹ் வாக்களித்துள்ளதாக இவ்வசனம் கூறுகின்றது.

இறைவனின் இந்த வாக்குறுதியைப் பெற்ற பிறகு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைமையில் படை நடத்திச் சென்றார்கள்.

இப்போது நாம் விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு வருவோம்.

இரண்டு கூட்டத்தில் ஒரு கூட்டத்தை வெல்வீர்கள் என்று இறைவன் வாக்களித்தால் அந்த வாக்குறுதி குர்ஆனில் கூறப்பட்டிருக்க வேண்டும். குர்ஆன் மட்டுமே இறைச் செய்தி என்ற வாதத்தின்படி நிச்சயமாக இத்தகைய ஒரு வசனம் குர்ஆனில் இருந்தாக வேண்டும்.

ஏனெனில் ஏற்கனவே அளித்த வாக்குறுதியை இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் நினைவு படுத்துகின்றான். எனவே இரண்டு கூட்டத்தில் ஒரு கூட்டத்தை நீங்கள் வெல்வீர்கள் என்று குர்ஆனில் கூறப்பட்டிருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் முழுவதும் தேடினாலும் இக்கருத்தைச் சொல்லும் வசனம் ஏதும் இல்லை. இறைவன் வாக்களித்ததாகக் கூறுகின்றான். ஆனால் அந்த வாக்குறுதி குர்ஆனில் இல்லை.

குர்ஆன் மட்டுமே போதும் என்பவர்கள் இப்போது குர்ஆன் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தக் காரணமாகி விடுகின்றனர். குர்ஆன் உண்மைக்கு மாற்றமான செய்தியைக் கூறுகின்றது என்ற கருத்தை இத்தகையோர் ஏற்படுத்துகின்றனர்.

குர்ஆன் மட்டுமின்றி வேறு வகையிலும் இறைவன் புறத்திலிருந்து செய்திகள் இறைத் தூதர்களுக்குக் கிடைக்கும் என்று நம்புவோருக்குக் குர்ஆன் மீது எந்தச் சந்தேகமும் ஏற்படாது. ஏனெனில் இறைவன் அளித்த அந்த வாக்குறுதி குர்ஆனில் உள்ளதா என்று தேடிப் பார்ப்பார்கள். குர்ஆனில் இல்லாத போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் தேடிப் பார்ப்பார்கள். “எனக்கு என் இறைவன் இரண்டு கூட்டத்தில் ஒன்றை வாக்களித்துள்ளான்” என்ற நபிமொழியைக் காண்பார்கள்.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் முடிவில் நாத்திகர்களாக மாறும் இழிவைச் சந்திப்பதற்கு அவர்களின் தவறான கொள்கையே காரணமாக அமைந்து விடுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் குர்ஆன் அல்லாத மற்றொரு வகையிலும் செய்தியை இறைவன் வழங்குவான் என்பதற்கு இவ்வசனமும் சான்றாக அமைந்துள்ளது.