11) ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்

திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமும் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் தான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் ஒரு அடிப்படையான விசயத்தை நாம் மறந்து விடக் கூடாது.

நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. குர்ஆனைப் பொருத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறை வேதம் என்பதற்கு சாட்சிகளாக உள்ளனர். குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி இது என் இறைவனிடமிருந்து வந்தது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழார்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.

ஹதீஸ்களைப் பொருத்த வரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார். ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஒருவரே சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது.

எவ்வளவு தான் நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) இப்படிச் சொல்லியிருப்பார்களா என்ற கடுகளவு கூட குர்ஆன் விசயத்தில் சந்தேகம் வராது.

ஹதீஸ்களைப் பொருத்த வரை இந்த நிலை கிடையாது.

ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை.

குர்ஆனுடன் மோதும் போது இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பது தான் முறையாகும்.

ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பது தான் நேர்மையான பார்வையாகும்.

இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும். இத்தகைய ஹதீஸ்கள் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான். புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்ட சில ஹதீஸ்களை இங்கே நாம் உதாரணமாகக் குறிப்பிட்டால் இதில் அதிகத் தெளிவு கிடைக்கும்.

ஒரு குழந்தை தனது தாய் அல்லாத வேறு பெண்ணிடம் பாலருந்தினால் அந்தப் பெண், அக்குழந்தைக்குத் தாய் என்ற அந்தஸ்தை அடைந்து விடுவாள் என்பதை நாம் அறிவோம். இது பற்றி(முஸ்லிம்: 2634, 2635)வது ஹதீஸ்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

பத்து தடவை பாலருந்தினால் தான் தாய் பிள்ளை எனும் உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் இது ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. இது திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.

இதை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

அதாவது ஐந்து தடவை பால் அருந்தினால் தாய் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்று ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகவும், இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்ததாகவும் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் அப்படி ஒரு வசனம் இருந்திருந்தால் அந்த வசனம் இன்றும் குர்ஆனில் நிச்சயம் இருந்தாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின் குர்ஆனில் உள்ள எதையும் நீக்கவோ, இல்லாததைச் சேர்க்கவோ முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே குர்ஆன் முழுவதும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டு விட்டதாலும், ஏராளமான நபித்தோழர்கள் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருந்ததாலும் குர்ஆனில் இருந்த ஒரு வார்த்தை கூட விடுபடுவதற்கு வழியே இல்லை.

ஆனால் ஆயிஷா (ரலி) கூறுவது போல் ஒரு வசனம் குர்ஆனில் காணப்படவில்லை. இந்த நிலையில் முஸ்லிம் நூலில் இடம் பெற்ற ஹதீஸாயிற்றே? நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே என்று காரணம் கூறி இதை ஏற்றுக் கொண்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; நபிகள் நாயகம் காலத்திற்குப் பின் குர்ஆனில் இருந்த பல வசனங்கள் நீக்கப்பட்டன என்ற கருத்து இதனால் ஏற்படும். குர்ஆன் இறைவனின் நேரடிப் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையே இந்தச் செய்தி கேள்விக்குறியாக்கி விடும். எனவே இந்த ஹதீஸை நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.

முஸ்லிம் நூலில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இதை நாங்கள் உண்மை என்று நம்புகிறோம் என்ற முடிவுக்கு நாம் வந்தால் ஹதீஸை நாம் மறுக்கவில்லை என்ற பெயர் நமக்குக் கிடைக்கலாம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வசனம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அனைத்து நபித்தோழர்களாலும் நீக்கப்பட்டு விட்டதாக இதன் விளைவு அமையுமே? இதற்கு என்ன பதில்?

குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; எந்த வசனத்தையும் யார் வேண்டுமானாலும் நீக்கி விடலாம் என்ற நிலையில் தான் குர்ஆன் இருந்தது என்ற கருத்து ஏற்படுமே? இதற்கு என்ன பதில்?

இதற்கு நம்மிடம் பதில் இல்லையானால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதில் எங்கோ தவறு நேர்ந்திருக்க வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடும் கருத்தை ஆயிஷா (ரலி) கூறியிருக்க மாட்டார்கள் என்று நல்லெண்ணம் வைப்பது தான் உண்மை விசுவாசிகளின் நிலையாக இருக்க வேண்டும்.

இது போல் சுலைமான் நபியைப் பற்றி புகாரி உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்ற ஒரு செய்தியையும் உதாரணமாகக் கூறலாம்.

இன்று இரவு நான் நூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன். அவர்களில் ஒவ்வொருத்தியும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்று சுலைமான் நபி கூறினார். அப்போது வானவர் இன்ஷா அல்லாஹ் கூறுங்கள் என்று கூறினார்.

ஆனால் சுலைமான் நபி கூறவில்லை. மறந்து விட்டார். அவர் கூறியவாறு நூறு பெண்களுடன் உடலுறவு கெண்டார். அவர்களில் ஒருத்தியும் குழந்தை பெறவில்லை. ஒரே ஒருத்தி மட்டும் பாதி மனிதனைப் (குறைப் பிரசவம்) பெற்றெடுத்தார்.

இந்தச் செய்தி(புகாரி: 5242)வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுலைமான் நபிக்கு நூறு மனைவிகளோ நூறு அடிமைப் பெண்களோ இருந்ததாக வைத்துக் கொண்டாலும் ஒரு இரவில் அனைவருடனும் உடலுறவு கொள்வது சாத்தியமற்றதாகும். இது சாத்தியமற்றதா அல்லவா என்ற சர்ச்சையைத் தவிர்த்து விட்டு மார்க்க அடிப்படையில் மட்டும் இதனை ஆய்வு செய்வோம். இறைத் தூதராக இருந்தாலும் எந்த மனிதரும் அறிந்து கொள்ள முடியாத ஐந்து விசயங்கள் உள்ளன. எந்தக் கருவறைகளில் எத்தனை குழந்தைகள் உண்டாகும்? ஒரு கருவறையில் குழந்தை உருவாகுமா? ஆகாதா என்பதும் அவற்றில் ஒன்றாகும்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

(அல்குர்ஆன்: 31:34)

தனது நூறு மனைவிகளும் கருவுறுவார்கள் என்று சுலைமான் நபியவர்கள் நிச்சயம் கூறியிருக்க முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விசயத்தில் எந்த இறைத்தூதரும் மூக்கை நுழைக்க மாட்டார்கள். நூறு மனைவிகளும் கருவுறுவார்கள் என்று இறைவன் சுலைமான் நபிக்கு அறிவித்துக் கொடுத்திருக்கலாம் அல்லவா? என்று சிலர் விளக்கம் கூறுவது கேலிக் கூத்தாகும்.

இறைவன் அறிவித்துக் கொடுத்திருந்தால் நூறு மனைவிகளும் நூறு ஆண் குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு நடக்காததால் சுலைமான் நபி தன்னிச்சையாகத் தான் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்ற கருத்தைத் தான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து பெற முடியும். இறைவன் அறிவித்துக் கொடுக்காத இந்த விசயம் குறித்து எந்த நபியும் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.

ஜக்கரிய்யா நபி அவர்களுக்கு தள்ளாத வயது வரை குழந்தை இல்லை. அல்லாஹ்விடம் அவர்கள் செய்து வந்த பிரார்த்தனையை ஏற்று அவர்களுக்கு ஒரு குழந்தையை அளிப்பதாக இறைவன் தெரிவிக்கிறான். தனது மனைவி கருவுற்று விட்டார் என்றால் அதை உடனடியாக அறிந்து கொள்ள அவர்கள் ஓர் அடையாளத்தைக் கேட்டார்கள். மூன்று நாட்கள் உனக்குப் பேச முடியாமல் போவது தான் அடையாளம் என்று இறைவன் கூறினான்.

ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப் பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை (என இறைவன் கூறினான்) என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன் என்று அவர் கூறினார். அப்படித் தான். அது எனக்கு எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவன் கூறுகிறான் என்றார். என் இறைவா! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு! என்று அவர் கேட்டார். குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேச மாட்டீர் என்பதே உமக்கு அடையாளம் என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 19:7), 8, 9, 10)

தமது மனைவியின் கருவறையில் குழந்தை உருவான பின்னரும் கூட அதை ஜக்கரியா நபியால் அறிந்து கொள்ள முடியவில்லை என்று குர்ஆன் கூறும் போது நூறு மனைவியரும் குழந்தை பெற்றெடுப்பார்கள் என்று சுலைமான் நபி கூறியிருக்க முடியாது.

அவ்வாறு கூற அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. நூறு மனைவிகளும் குழந்தை பெறுவார்கள் என்பதை மட்டும் சுலைமான் நபி கூறவில்லை.

ஆண் குழந்தையைத் தான் பெற்றெடுப்பார்கள் என்று அடித்துக் கூறுகிறார்கள்.

அந்த நூறு பேரும் வளர்ந்து பெரியவர்களாகி நல்லடியார்களாக வாழ்ந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்றெல்லாம் எதிர் காலம் பற்றி பல விசயங்களை அவர்கள் கூறியதாக அந்த ஹதீஸ் கூறுகிறது.

அவர்கள் கூறியவாறு எதுவுமே நடக்காததால் சுயமாகத் தான் அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியெல்லாம் சுலைமான் நபியும் கூற மாட்டார்கள். சுலைமான் நபி கூறியதாக நபிகள் நாயகமும் கூறியிருக்க மாட்டார்கள். மேலும் இன்ஷா அல்லாஹ் என்று கூறுமாறு வானவர் சுட்டிக் காட்டிய பிறகும் அவர்கள் கூறவில்லை என்பது ஏற்கும்படி இல்லை.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட இன்ஷா அல்லாஹ் கூற மறந்து விட்டால் யாராவது சுட்டிக் காட்டினால் உடனே திருத்திக் கொள்கிறோம். ஒரு வானவர் நினைவூட்டிய பின்னரும் சுலைமான் நபி அதைச் செய்யவில்லை என்பது அவர்களின் தகுதிக்கு ஏற்புடையதாக இல்லை.

எனவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கும் வகையில் இது அமைந்திருப்பதால் இதை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாக இருந்த போதும் இதை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். இதை உண்மை என நம்பினால் குர்ஆனின் பல வசனங்களை நாம் மறுத்தவர்களாகி விடுவோம். இது போக அந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் இந்த முடிவை மேலும் உறுதிப்படுத்துகிறது.

நூறு பெண்களுடன் இன்றிரவு உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக(புகாரி: 5242)

எழுபது பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக(புகாரி: 3424)

தொண்ணூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக(புகாரி: 6639, 6720)

அறுபது மனைவியரிடம் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக(புகாரி: 7469)

ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன.

இந்த அனைத்து ஹதீஸ்களும் அபூஹுரைரா (ரலி) வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. 60, 70, 90, 100 என்று முரண்பட்ட எண்ணிக்கை இதில் சந்தேகத்தை அதிகமாக்குகிறது.

நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது என்று காரணம் கூறி இதை உண்மை என்று நம்பினால் சுலைமான் நபி அவர்களின் தகுதிக்கு அது குறைவை ஏற்படுத்தும்.

திருக்குர்ஆனின் பல வசனங்களுடனும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுடனும் மோதும் என்பதைக் கவனத்தில் கொண்டு நம்மால் கண்டு பிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இதில் இருக்கலாம் என்று கருதி இதை நிராகரித்து விட வேண்டும்.

மற்றொரு ஹதீஸையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

உயிரைக் கைப்பற்றும் வானவர் மூஸா நபியிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்ததும் மூஸா நபியவர்கள் அவரை அறைந்து விட்டார். உடனே வானவர் இறைவனிடம் சென்று மரணத்தை விரும்பாத அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாயே? என்று முறையிட்டார். அதற்கு இறைவன் நீ மீண்டும் அவரிடம் செல்! காளை மாட்டின் முதுகின் மேல் அவரது கையை வைக்கச் சொல்! அவரது கையின் அடியில் உள்ள ஒவ்வொரு முடிக்கும் ஒரு வருடம் என்ற அளவில் வாழ் நாள் கொடுக்கப்பட்டதாகக் கூறு! என்று சொல்லியனுப்பினான். அவர் வந்து மூஸா நபியிடம் இதைத் தெரிவித்தார். அதற்கு மூஸா நபியவர்கள் இறைவா! அதன் பின்னர் என்ன? என்று கேட்டார். அதன் பின்னர் மரணம் தான் என்று இறைவன் கூறினான். அப்படியானால் இப்போதே மரணிக்க நான் தயார் என்று மூஸா (அலை) கூறினார்.

இது அபூஹுரைரா (ரலி)யின் கூற்றாகவும், நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகவும்(புகாரி: 3407)வது ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரியில் இது பதிவு செய்யப்பட்டதாலும், இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பதாலும் இதை அப்படியே ஏற்க இயலுமா? இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கோ, திருக்குர்ஆன் வசனங்களுக்கோ முரணாக இல்லாவிட்டால் இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும். இந்த ஹதீஸைப் பொருத்த வரை திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களுடன் முரண்பட்டு நிற்கிறது.

ஒரு வானவர் இறைக் கட்டளையை நிறைவேற்றாமல் தோல்வியுடன் திரும்பிச் சென்றார் என்று இதில் கூறப்படுகிறது. இது சரி தானா என்பதை முதலில் ஆராய்வோம். வானவர்களுக்கு என்று சில இலக்கணங்கள் உள்ளதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

(அல்குர்ஆன்: 16:49), 50)

அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

(அல்குர்ஆன்: 21:26),27)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன்: 66:6)

இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பினானோ அதைச் செய்து முடிப்பது தான் வானவர்களின் இலக்கணம். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவரை இறைவன் அனுப்பினால் அவர் அந்த வேலையைச் செய்யாமல் திரும்ப மாட்டார். இந்த இலக்கணத்திற்கு எதிரான கருத்தை அந்த ஹதீஸ் கூறுகிறது.

மேலும் நபிமார்கள் இறைவன் அனுப்பி வைத்த தூதரை அடித்து விரட்டுவார்களா? இறைவனின் ஏற்பாட்டுக்கு செவி சாய்க்க மறுப்பார்களா என்றால் நிச்சயம் அப்படிச் செய்ய மாட்டார்கள். மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவரான மூஸா நபியவர்கள் இந்த ஹதீஸில் கூறப்பட்டவாறு நடந்திருப்பார்களா? என்பதும் சிந்தித்துப் பார்க்க வேண்டியதாகும்.

இவ்வுலக வாழ்க்கை அற்பமானது. மறுமை வாழ்வு தான் நிலையானது என்பது எல்லா இறைத் தூதர்களின் போதனையாக இருந்தது. தமக்கு மரணம் வந்து விட்டது என்பதை மூஸா நபியவர்கள் அறிந்து கொண்டால் அதற்கு தம்மை தயார் படுத்திக் கொள்வார்களே தவிர அதை எதிர்த்து எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டார்கள். மேலும் வானவர்கள் சுயமாக எந்தக் காரியத்திலும் இறங்க மாட்டார்கள்.

அல்லாஹ் இட்ட கட்டளையைத் தான் செய்வார்கள் என்பது நமக்கே தெரியும் போது மூஸா நபிக்கு இந்த உண்மை தெரியாமல் இருக்க முடியாது. இறைவனால் அனுப்பப்பட்ட தூதரை அறைவது இறைவனை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்குச் சமமாகும் என்பதைக் கூட மூஸா நபியவர்கள் அறிந்திருக்கவில்லை என்ற கருத்திலமைந்த ஹதீஸை நாம் எவ்வாறு நம்ப இயலும்? அப்படியே மூஸா நபியவர்கள் வானவரை அறைந்தால் இறைவன் பணிந்து கெஞ்சிக் கொண்டிருப்பானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

யூனுஸ் நபியவர்கள் இறைவனுடன் கோபித்துக் கொண்டு போனதற்காக அவரை எவ்வாறு நடத்தினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன் என்று இருள் களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்த னையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

(அல்குர்ஆன்: 21:86),87)

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்

(அல்குர்ஆன்: 68:49)

மூஸா நபி இவ்வாறு நடந்திருந்தால் இது போன்ற கடும் நடவடிக்கை எடுப்பது தான் இறைவனது தனித்தன்மை. தனது பெருமை விசயத்தில் அவன் சமரசம் செய்து கொண்டதே இல்லை. இறைவனைப் பொருத்த வரை அவனது கௌரவம் தான் அவனுக்கு முதன்மையானதாகும். இந்த அடிப்படையையும் இந்த ஹதீஸ் அறவே தகர்த்து எறிவதால் இந்த ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இது போல் அமைந்த மற்றொரு ஹதீஸையும் இறுதியாக நினைவுபடுத்துகிறோம்.

ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபா (ரலி) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது ஸாலிமுக்குப் பாலூட்டு! இதனால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக(முஸ்லிம்: 2638, 2636, 2639, 2640)ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

அன்னிய இளைஞர் ஒருவருக்குப் பால் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) நிச்சயம் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள். பால் ஊட்டுதல் என்பது இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தான் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியை ஏற்காது நாம் விட்டு வருகிறோம்.

நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இந்த அறிவிப்பில் இருக்கலாம். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்கிறோம்.

இதை சரியானது என்று எவராவது வாதிட்டால் இன்றைக்கு இதனடிப்படையில் நடக்கலாம் என்று ஃபத்வா வழங்குவார்களா? நிச்சயம் வழங்க மாட்டார்கள்.

அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில ஹதீஸ்களின் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராக உள்ளன. இது போன்ற ஹதீஸ்களை நம்பி இஸ்லாத்தின் அடிப்படையையும் குர்ஆன் வசனங்களையும் மறுக்கும் நிலை ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இதைக் குறிப்பிடுகிறோம்.

இது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டார்கள் என்று நம்பி மேலே நாம் எடுத்துக்காட்டிய அத்தனை வசனங்களையும் மறுப்பதை விட அந்த வசனங்களை ஏற்று அந்த ஹதீஸை ஏற்காது விட்டு விடுவது தான் சிறந்ததாகும்.

அந்தச் செய்தியில் எங்கோ தவறு ஏற்பட்டுள்ளது என்பதை இந்தச் செய்தி பலவிதமாக அறிவிக்கப்படுவதிலிருந்தே நாம் முடிவு செய்து விடலாம். சீப்பு, உதிர்ந்த முடிகள் ஆகியவற்றின் மூலம் சூனியம் செய்யப்பட்டு கிணற்றில் புதைக்கப்பட்டதாக இது குறித்த ஹதீஸ்களில் கூறப்படுகிறது.