08) பாதுகாக்கப்பட்ட இறை வேதம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது; அந்த பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது; தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன. திருமறைக் குர்ஆனின் நம்பகத் தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது விபரீதமாகும்.
தமக்குச் சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ – இறை வேதம் – சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.
தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும்.
ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும். அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்ட காலம், எந்த ஆறு மாதம் என்ற விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் இது அந்த ஆறு மாதத்தில் அருளப்பட்ட தாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடும்.
இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் உள்ள ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும். திருக்குர்ஆனில் பொய்யோ, கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தையாகும் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது. குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன் அடைத்து விட்டான்.
இது இறைவேதமாக இருக்காது என்ற சந்தேகம் எள் முனையளவும் ஏற்படக் கூடாது என்பதற்காக இறைவன் பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான்.
இதை விரிவாக நாம் அறிந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது என்பதை நிச்சயம் நம்ப மாட்டோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் பண்டிதர்களும் பிரமிப்புடன் பார்க்கும் அளவுக்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது மக்கள் திருக்குர்ஆனை இறைவனின் வேதம் என்று நம்பியிருக்க மாட்டார்கள். முஹம்மது தனது புலமையைப் பயன்படுத்தி உயர்ந்த நடையில் இதைத் தயாரித்து இறை வேதம் என்று ஏமாற்றுகிறார் என்று அந்த மக்கள் நினைத்திருப்பார்கள். அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே முஹம்மது நபிக்கு எழுத்தறிவை வழங்கவில்லை என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்.
(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
எழுத்தறிவு என்பது பெரும் பாக்கியமாக இருந்தும், (68:1, 96:4) அந்த பாக்கியத்தை வேண்டுமென்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கவில்லை என்று இறைவன் கூறுகிறான். திருக்குர்ஆன் இறை வேதம் என்பதில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதே இதற்குக் காரணம் என்று மேற்கண்ட வசனத்தில் அறிவிக்கிறான். ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக குர்ஆனை வழங்கினால் அனைத்துச் சட்டங்களும் மக்களுக்கு ஒரே நேரத்தில் கிடைத்து விடும். ஆனாலும் இதை வேண்டுமென்றே தான் தவிர்த்ததாக இறைவன் அறிவிக்கிறான்.
மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம்.(அல்குர்ஆன்: 17:106) ➚இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.
சிறிது சிறிதாக அருளினால் மனனம் செய்ய இயலும். உள்ளத்தில் பதிய வைக்க இயலும் என்பதற்காகவே இவ்வாறு சிறிது சிறிதாக அருளியதாக இறைவன் குறிப்பிடுகிறான். இந்த அறிவுரையை நாமே அருளினோம். நாமே அதைப் பாதுகாக்கவும் செய்வோம் எனவும் இறைவன் பிரகடனம் செய்கிறான். (பார்க்க(அல்குர்ஆன்: 15:9) ➚ இந்தக் குர்ஆனில் கோனலோ, குறைகளோ, முரண்பாடுகளோ இல்லை என்றெல்லாம் கூறி திருக்குர்ஆனின் நம்பகத் தன்மையை நிலை நாட்டுகிறான்.
(பார்க்க(அல்குர்ஆன்: 18:1, 39:28, 41:42, 4:82) ➚
திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனின் கற்பனையா என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ அல்லது செய்ததைச் செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறுவது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதை நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறும் மேற்கண்ட வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்று கூறப்படுவதை நம்ப முடியாது.
வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளது உள்ளபடி கூறினார்கள். மற்ற விஷயங்களில் தான் மனநிலை பதிப்பு ஏற்பட்டது என்று சிலர் இதற்கு விளக்கம் கூறுகின்றனர்.
இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும்.
குர்ஆன் இறைவேதம் தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்து கொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறை வாக்கா அல்லவா என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர்.
ஆறு மாத காலம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களிடம் இந்த வாதம் எடுபடுமா என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டனர்.
செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர வஹீக்கு மட்டும் விதிவிலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அன்றைய மக்களால் திருக்குர்ஆன் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.