60) முத்தலாக் – ஒரு விளக்கம்

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

தலாக் கூறுவதற்கு இஸ்லாம் மூன்று வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதை அறியாத சில முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று கூறுகின்றனர். அல்லது முத்தலாக் என்று கூறுகின்றனர். இப்படிக் கூறிவிட்டதால் மூன்று தலாக்கும் முடிந்து விட்டது என்றும், இனிமேல் மனைவியுடன் சேர வழியில்லை என்றும் கருதுகின்றனர். மார்க்க அறிவு குறைந்த மதகுருமார்கள் சிலரும் இப்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கி நிரந்தரமாகப் பிரித்து விடுகின்றனர்.

இது இஸ்லாம் அனுமதிக்காத வழக்கமாகும்.

தலாக் என்றால் விடுவித்தல் என்பது பொருள். மூன்று தடவை விடுவித்தல் என்றால் மூன்று தடவை அது நிகழ வேண்டும். மூன்று என்ற வார்த்தையால் மூன்று தடவை நிகழ்ந்ததாக ஆகாது.

ஒரு மனிதன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவனை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேலையை விட்டு நீக்குகிறார். அப்படி நீக்கும் போது உன்னை நீக்கி விட்டேன்; உன்னை நீக்கி விட்டேன்; உன்னை நீக்கி விட்டேன் என்று மூன்று தடவை கூறுகிறார். இப்படிக் கூறியதால் மூன்று தடவை நீக்கியதாக ஆகுமா? லட்சம் தடவை இச்சொல்லை அவன் சொன்னாலும் ஒரு தடவை நீக்கியதாகத் தான் அர்த்தம். அல்லது மூன்று தடவை உன்னை நீக்கி விட்டேன் என்று சொன்னாலும் ஒரு தடவை நீக்கியதாகத் தான் பொருள்.

நீக்கி விட்டு பின்னர் சேர்த்து பின்னர் நீக்கி பின்னர் சேர்த்து பின்னர் நீக்கினால் தான் மூன்று தடவை நீக்கியதாக ஆகும்.

ஒரு தலாக் சொன்னவுடன் அவள் மனைவியாக இருக்க மாட்டாள். அதன்பின் சொன்ன தலாக் மனைவியல்லாதவளுக்குச் சொன்னதாகத்தான் ஆகும். மீண்டும் சேர்த்துக் கொள்ளாமல் அடுத்த தலாக் கூறுதல் அறிவீனமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இப்படி சிலர் சொன்ன போது அது ஒரு தலாக் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.

أَنَّ أَبَا الصَّهْبَاءِ، قَالَ لِابْنِ عَبَّاسٍ: هَاتِ مِنْ هَنَاتِكَ، أَلَمْ يَكُنِ الطَّلَاقُ الثَّلَاثُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ وَاحِدَةً؟ فَقَالَ: قَدْ كَانَ ذَلِكَ، فَلَمَّا كَانَ فِي عَهْدِ عُمَرَ تَتَايَعَ النَّاسُ فِي الطَّلَاقِ، فَأَجَازَهُ عَلَيْهِمْ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) காலத்திலும், ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது. உமர் (ரலி) ஆட்சியின் போது மக்கள் அதிகமாக தலாக் சொல்ல ஆரம்பித்த போது மூன்று தலாக் என்று சொன்னால் மூன்று தலாக் தான் என சட்டமாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: முஸ்லிம்

உமர் (ரலி) அவர்களுக்கோ மற்ற யாருக்குமோ நபிகள் காலத்தில் இருந்த சட்டத்தில் மாற்றம் செய்ய உரிமை இல்லை. அதை சட்டமாக ஏற்கும் அவசியம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்களின் சட்டம் இருக்கிறது என்று தெரிந்த பின்னர் நபியின் சட்டத்துக்கு எதிராக இயற்றபடும் சட்டத்துக்கு கட்டுப்படுவது பாவமாகும்.

மூன்று தலாக் என்று ஒருவன் கூறினால் அவன் ஒரு சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்தியுள்ளான்.

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவன் அவளுடன் சேரலாம். காலம் கடந்து விட்டால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பிறகு மேலும் இரண்டு தடவை விவாகரத்துக் கூறும் உரிமை அவனுக்கு உள்ளது.

மூன்று தலாக் என்ற சொல்லைப் பயன்படுத்தி விட்டால் இனி மேல் மனைவியுடன் சேரவே முடியாது என்று சிலர் கருதுவது தான் மற்றவர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இல்லாத இந்த நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்.

மூன்று தலாக் இஸ்லாத்தில் உள்ளது. முத்தலாக் இஸ்லாத்தில் இல்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.