58) தலாக்கின் விதிமுறைகள்

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது. பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும்.

பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் அறிவுரைகள் சொல்ல வேண்டும். விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற வேண்டும்.

இந்த அறிவுரைகள் பயனளிக்காத போது இருவரும் படுக்கையில் இருந்து விலகிப் பார்க்க வேண்டும்.

இப்படி சில நாட்கள் மனைவியுடன் சேராமல் இருக்கும் போது அவனுக்கு மனைவியின் குறைகள் மட்டுமின்றி அவளது அருமையும் தெரிய வரும். அதுபோல் கணவனைப் பிரிந்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பது மனைவிக்கும் தெரிய வரும்.

இதனால் தன்னிடம் தவறு இருந்தால் அவளும் திருத்திக் கொள்வாள். அவனிடம் தவறு இருந்தால் அவளும் திருத்திக் கொள்வாள்.

தலாக் கூறும் முடிவு இதனால் மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.

தலாக் என்ற நிலைக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக மனைவியிடம் பெரிய குறைகள் இருந்தால் அடித்து திருத்தியாவது தலாக் கூறும் முடிவுக்குச் செல்லாமல் இஸ்லாம் தடுக்கப் பார்க்கிறது.

இதன் பின்னரும் இணக்கம் ஏற்படாவிட்டால் உடனே தலாக் கூற முடியாது. ஜமாஅத்துக்கு அவன் பிரச்சனையைக் கொண்டு வந்தவுடன் அவனது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும், அவளது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும் ஜமாஅத்தார் நியமித்து அவர்கள் வழியாக சமரசம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இது முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனில் தெளிவான வார்த்தைகளால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வசனங்களைப் பாருங்கள்!

சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 2:34)➚

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 2:35)➚

நடுவர்களை ஏற்படுத்துங்கள் என்று கூறப்படுவதால் ஆண்கள் சுயமாக தலாக் கூற முடியாது. மூன்றாம் தரப்பான ஜமாஅத் தலையீடு இதில் இருப்பது அவசியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்த நான்கு நடவடிக்கைகளாலும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.