51) பெண்களுக்கு இத்தா ஏன்?

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

கணவனை இழந்த பெண்கள் உடனே மறுமணம் செய்யக் கூடாது என்றும், எவ்வளவு நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மறுமணம் செய்யலாம் என்றும் 2:228, 2:231, 2:232, 2:234, 2:235, 33:49, 65:1 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது இத்தா காலம் என்று சொல்லப்படுகிறது.

2:234, 2:235 வசனங்களில் கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் முடியும் வரை மறுமணம் செய்யக் கூடாது என்று கூறப்படுகின்றது.

கர்ப்பிணிகள் பிரசவிக்கும் வரை இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மாதவிடாய் அற்றுப் போன வயதானவர்கள் மூன்று மாதங்கள் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் 65:4 வசனம் கூறுகின்றது.

இந்தச் சட்டம் பெண்களுக்கு கேடு செய்வதற்கான சட்டம் அல்ல. அவர்களுக்கு மிகப்பெரும் நன்மைகளைப் பெற்றுத் தரும் சட்டமாகும்.

கணவன் மரணிக்கும் போது அவனது கருவை மனைவி சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.

முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடக்கூடும். தந்தை யார் என்பது தெரியாததால் மனரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.

“இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள்” என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக் குறியாகி விடும்.

“கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதும்: அந்த மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே? நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா?” என்று சிலர் நினைக்கலாம்.

இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.

ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதை முதல் மாதமே அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். தான் கருவுறவில்லை என்று அவள் கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்கள் கழிந்த பின் இவ்வாறு கூற முடியாது. கர்ப்பமாக இருப்பது வெளிப்படையாகவே மற்றவர்களுக்கும் தெரிந்து விடும்.

இரண்டாம் திருமணம் முடித்து ஆறேழு மாதங்களில் அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு இரண்டாம் திருமணம் நடந்திருந்தால் அவன் இப்படிக் கூற முடியாது. வயிற்றில் குழந்தை இருந்தால் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரிந்திருக்குமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.

இத்தகைய காரணங்களால், பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவர்களது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.

இத்தா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விதிமுறை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

சில முஸ்லிம்கள் கணவனை இழந்த பெண்களை இத்தா என்ற பெயரில் நான்கு மாதம், பத்து நாட்கள் இருட்டறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துகின்றனர். இது குற்றமாகும். மறுமணம் செய்யாமல் இருப்பதும், திருமணத்தைத் தூண்டும் அலங்காரங்களைத் தவிர்ப்பதும் தான் இத்தா என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இத்தா என்ற பெயரில் இருட்டறையில் பெண்களை அடைத்து வைக்கின்றனர். எந்தத் தேவைக்காகவும் வெளியே செல்லத் தடை விதிக்கின்றனர்.

மார்க்கம் கட்டளையிட்டவாறு ஹிஜாப் அணிந்திருந்த போதும் எந்த ஆணும் அவளைப் பார்க்கக் கூடாது என்கின்றனர்.

ஆண் குழந்தைகளைக் கூட பார்க்கக் கூடாது என்று தடை விதிக்கின்றனர்.

இவை அனைத்தும் மூடநம்பிக்கைகள் ஆகும்.

இது தவிர இன்னொரு வகை இத்தாவும் உண்டு. மனைவியை கணவன் விவாகரத்துச் செய்தால் அவர்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலமும் இத்தா எனப்படும். அதாவது விவாகரத்து முடிந்த உடன் பெண்கள் மறுமணம் செய்யாமல் மூன்று மாதவிடாய்க் காலம் காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்துக்குள் கணவன் அவளுடன் சேர்ந்து கொள்ளலாம். இந்த இத்தாவை 2:228, 2:231, 2:232, 33:49, 65:1 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இத்தாவுக்கு தனியாக எந்தக் கட்டுப்பாடும் மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. அந்தக் காலம் முடிவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது என்பது மட்டுமே இந்த இத்தாவின் ஒரே விதியாகும்.

இத்துடன் இன்னும் சில விதிகளும் உள்ளன. அவற்றை மட்டும் கடைப்பிடித்தால் போதுமானது.

عَنْ أُمِّ عَطِيَّةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: كُنَّا نُنْهَى أَنْ نُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، وَلاَ نَكْتَحِلَ وَلاَ نَتَطَيَّبَ وَلاَ نَلْبَسَ ثَوْبًا مَصْبُوغًا، إِلَّا ثَوْبَ عَصْبٍ، وَقَدْ رُخِّصَ لَنَا عِنْدَ الطُّهْرِ إِذَا اغْتَسَلَتْ إِحْدَانَا مِنْ مَحِيضِهَا فِي نُبْذَةٍ مِنْ كُسْتِ أَظْفَارٍ، وَكُنَّا نُنْهَى عَنِ اتِّبَاعِ الجَنَائِزِ

மறுமணத்தைத் தள்ளிப் போட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் நறுமணம் பூசக்கூடாது. கண்மை இடக்கூடாது. அஸப் எனப்படும் வண்ண உடை தவிர வேறு வண்ண உடைகளை அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) ,

(புகாரி: 313) , (புகாரி: 5341) , (புகாரி: 5343)

துணிகளை நெய்வதற்கான நூல்களை முறுக்கிய நிலையில் சாயத்தில் முக்கி எடுத்துப் பின்னர் பிரித்து நெய்யப்படுவதே அஸப் எனப்படும். இவ்வாறு செய்வதால் முறுக்கப்பட்ட நூல் தொகுப்பின் உட்பகுதி சாயமில்லாமலும், வெளிப்பகுதி சாயமாகவும் இருக்கும். அதாவது வெள்ளையும், நிறமும் கலந்ததாக அது இருக்கும்.

முற்றிலும் வண்ணமாக உள்ள ஆடைகளைத் தவிர்த்து வெள்ளையும், வண்ணமும் கலந்த நிலையில் உள்ள ஆடைகளையோ, முற்றிலும் வெண்மையான ஆடைகளையோ அணியலாம்.

عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا لَا تَلْبَسُ الْمُعَصْفَرَ مِنَ الثِّيَابِ، وَلَا الْمُمَشَّقَةَ، وَلَا الْحُلِيَّ، وَلَا تَخْتَضِبُ، وَلَا تَكْتَحِلُ

இத்தா காலகட்டத்தில் நகை அணியலாகாது. மருதானி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி),

நூல்: அபூ தாவூத்

இவற்றைக் கடைப்பிடித்தால் ஒருத்தி இத்தாவைக் கடைப்பிடித்து விட்டாள் என்பது பொருள்.

இந்தக் காலகட்டத்தில் திருமணத்தை நிச்சயம் செய்யவும் கூடாது.

(காத்திருக்கும் கால கட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 2:235)➚

மறுமணத்தைத் தள்ளிப் போட்டுள்ள காலகட்டத்தில் அந்தப் பெண்ணிடம் ஆண்கள் பேசலாம் என்பதையும், அவ்வாறு பேசும் போது உண்னை நான் மணந்து கொள்கிறேன் என்று நேரடியாகப் பேசக் கூடாது என்பதையும், சாடைமாடையாக இவ்வாறு பேசிக் கொள்ளலாம் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இத்தா காலத்தில் ஆண்களைப் பார்க்கவோ, பேசவோ கூடாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கும் இவ்வசனம் போதிய சான்றாக உள்ளது.

இது பற்றி மக்களிடம் அதிகமான அறியாமை நிலவுவதால் மேலும் சில சான்றுகளை முன் வைக்கிறோம்.

عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ أَوِ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلاَئِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ. قَالَتْ فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ أَتَيْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سَلَمَةَ قَدْ مَاتَ قَالَ قُولِى اللَّهُمَّ اغْفِرْ لِى وَلَهُ وَأَعْقِبْنِى مِنْهُ عُقْبَى حَسَنَةً. قَالَتْ فَقُلْتُ فَأَعْقَبَنِى اللَّهُ مَنْ هُوَ خَيْرٌ لِى مِنْهُ مُحَمَّدًا صلى الله عليه وسلم.

(என் கணவர்) அபூ ஸலமா மரணித்த போது நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸலமா மரணித்து விட்டார் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹும்மக்ஃபிர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்பா ஹஸனதன் (இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவருக்குப் பகரமாக அவரை விடச் சிறந்ததைத் தருவாயாக!) எனக் கூறு என்றார்கள். நான் அவ்வாறு கூறினேன். அவரை விடச் சிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்குப் பகரமாகத் தந்தான் என்று உம்மு ஸலமா (ரலி) கூறுகிறார்கள்.

நூல்: முஸ்லிம்

கணவரை இழந்த உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தேடிச் சென்றுள்ளனர். இது தவறு என்றால் கணவனை இழந்த நீ எப்படி வெளியே வரலாம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டிருப்பார்கள். வெளியே வந்த உம்மு ஸலமா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள். இத்தா காலகட்டத்தில் எப்படி ஒரு ஆணிடம் பேசலாம்? என்று அவர்கள் கேட்கவில்லை.

இத்தா இல்லாத காலங்களில் அன்னிய ஆடவனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதைத் தான் இத்தாவின் போதும் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் மற்ற நேரங்களில் வெளியே செல்வது போல் சென்று வருவது தவறல்ல என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.