45) கணவனுக்குத் தெரியாமல் அவனது பொருளை எடுக்கலாமா?

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

கணவர் குடும்பத் தேவைகளுக்குப் போதுமான தொகையைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தால் அவருக்குத் தெரியாமல் தேவையான அளவு அவனது பணத்தில் மனைவி எடுத்துக்கொள்வது குற்றமில்லை. அப்படி எடுக்கும் தொகை முக்கியமான குடும்பத் தேவைகளுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும்.

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: قَالَتْ هِنْدٌ أُمُّ مُعَاوِيَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، فَهَلْ عَلَيَّ جُنَاحٌ أَنْ آخُذَ مِنْ مَالِهِ سِرًّا؟ قَالَ: خُذِي أَنْتِ وَبَنُوكِ مَا يَكْفِيكِ بِالْمَعْرُوفِ

முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், (என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமாகுமா? எனக் கேட்டார்கள். அதற்கு, உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக் கொள்ளுங்கள்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்,

(புகாரி: 2211)

கணவனைப் பாதிக்காத வகையில் கணவனின் பொருட் களில் இருந்து நல்லறங்களுக்காக மனைவி செலவிடலாம்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَنْفَقَتِ المَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ، كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ، وَلِزَوْجِهَا أَجْرُهُ بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لاَ يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை – வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளது கணவனுக்கும் கிடைக்கும்;

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

(புகாரி: 1425)