32) பொறுப்பாளர் மறுத்தால் சமுதாயத் தலைவர்கள் நடத்தி வைக்கலாம்.

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ، فَقَالَتْ: إِنَّهَا قَدْ وَهَبَتْ نَفْسَهَا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا لِي فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ، فَقَالَ رَجُلٌ: زَوِّجْنِيهَا، قَالَ: أَعْطِهَا ثَوْبًا، قَالَ: لاَ أَجِدُ، قَالَ: أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ، فَاعْتَلَّ لَهُ، فَقَالَ: مَا مَعَكَ مِنَ القُرْآنِ؟ قَالَ: كَذَا وَكَذَا، قَالَ: فَقَدْ زَوَّجْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ

5029 ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை அன்பளிப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை என்று சொன்னார்கள். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்! என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஏதேனும் ஆடையை அவளுக்கு (மஹ்ராக)க் கொடு! என்று சொன்னார்கள். அவர், என்னிடம் இல்லை என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன இருக்கிறது? என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்முடன் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன் என்று சொன்னார்கள்.

(புகாரி: 5029)

ஒரு பெண் தன்னை நபிகளிடம் அர்ப்பணித்துள்ளார். அதாவது என் விஷயமாக நீங்கள் என்ன முடிவும் எடுக்கலாம் என்பது இதன் கருத்து. உன் பொறுப்பாளர்களை அழைத்து வா என்று கூறாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பொறுப்பாளராக முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்கள்.

ஒரு பெண் தனது மன வாழ்வு சம்மந்தமான முடிவை சமுதாயத் தலைவரிடம் ஒப்படைக்கலாம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப் படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்த மானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல்குர்ஆன்: 2:232)➚

அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள் என்ற வாசகத்தில் இருந்து அவர்களுக்கு பொறுப்பாளர் திருமணம் செய்து வைக்க வேண்டியதில்லை என்று அறியலாம்.

(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 2:230)➚

அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள் என்ற வாசகம் விவாகரத்து செய்யப்பட்டவளுக்கு பொறுப்பாளர் தேவை இல்லை என்ற கருத்தைத் தருகிறது.

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:234)➚

அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை இந்த வாசகத்தின் மூலம் கணவனை இழந்த பெண்கள் தம் விஷய மாக தாமே முடிவு எடுக்கலாம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الْأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا،

ஏற்கனவே வாழ்ந்தவள் தனது பொறுப்பாளரை விட தன் விஷயமாக அதிக உரிமை படைத்தவள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : முஸ்லிம்