30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடும் பாறை: அறிவியல் சொல்லும் ரகசியம் என்ன?

அறிவியல் உண்மைகள்

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குயிசூ மாகாணத்தில், ‘சான் டா யா’ (Chan Da Ya) என்ற மலைப்பாறை உள்ளது.

இந்த மலைப்பாறை சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டை வடிவிலான பெரிய கற்களை வெளியிடுகிறது.

இது எரிமலை போலவோ, வேறு இயற்கைச் சீற்றங்கள் போலவோ இல்லாமல், அமைதியாக நடக்கும் ஒரு நிகழ்வு.

புவியியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த மலைப்பாறையை ஆய்வு செய்தபோது, இது இரண்டு வகையான பாறைகளால் ஆனது என்று கண்டறிந்தனர்.

மென்மையான சுண்ணாம்ப்புப் பாறையும், கடினமான பாறை அடுக்குகளும் இங்கு கலந்து காணப்படுகின்றன.

பல ஆண்டுகளாக காற்று மற்றும் மழையால் மென்மையான பாறை அடுக்குகள் அரிக்கப்படுகின்றன; ஆனால் அதனுள் இருக்கும் கடினமான முட்டை வடிவிலான பாறைகள் அரிக்கப்படாமல் அப்படியே இருக்கின்றன.

மென்மையான பாறை அடுக்குகள் முழுமையாக அரிக்கப்பட்ட பிறகு, உள்ளே இருக்கும் கடினமான முட்டைக் கற்கள் மெதுவாக வெளிப்பட்டு, இறுதியில் பாறையிலிருந்து பிரிந்து கீழே விழுகின்றன.

ஒரு கல் முழுமையாக வெளிவர சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கற்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கேம்ப்ரியன் காலத்தில் (Cambrian period) உருவானவை என சில புவியியலாளர்கள் கருதுகின்றனர்.

இந்த மலைக்கு அருகில் உள்ள குலு சாய் கிராமத்தில் வசிக்கும் ‘ஷூய்’ (Shui) பழங்குடியின மக்கள், இந்த முட்டைக் கற்களை அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும், தங்களைக் காக்கும் புனிதப் பொருளாகவும் கருதுகின்றனர்.

பல குடும்பங்கள் இந்தக் கற்களை தங்கள் வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர். இது அவர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படுகிறது.

இறைவன் தனது படைப்பில் எத்தனையோ விந்தைகளையும், அதிசயங்களையும் வைத்துள்ளான். இத்தகைய இயற்கையின் நிகழ்வுகளைக் காணும்போது, அவனது அளவற்ற ஆற்றலையும், ஞானத்தையும் நாம் உணர்ந்து போற்றுகிறோம்.

ஆதாரம்: விகடன்