ஸகாத் மறுத்தோருடன் போரிட அபூபக்ர் (ரலி) எடுத்த முடிவும், உமர் (ரலி) மனம் மாறியதும்

ஹதீஸ் சம்பவங்கள்

لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ بَعْدَهُ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِأَبِي بَكْرٍ: كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللهُ، فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ، وَنَفْسَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللهِ “، فَقَالَ أَبُو بَكْرٍ: وَاللهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ، وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَاللهِ لَوْ مَنَعُونِي عِقَالًا كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: فَوَاللهِ، مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ اللهَ عَزَّ وَجَلَّ قَدْ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ، فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபின் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சியாளர் ஆக்கப்பட்டதும் அரபுகளில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்ததன் மூலம்) இறை மறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆயத்தமானார்கள். அப்போது) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று (இந்த) மக்கள் கூறும்வரை அவர்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.

லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் (தகுந்த காரணமிருந்தாலன்றி)தமது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது (அந்தரங்கம் பற்றிய) விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது.” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது நீங்கள் எவ்வாறு (இறை நம்பிக்கை கொண்டுள்ள) இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன்.

ஏனெனில் ஸகாத், செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழங்கிவந்த ஒட்டகத்தின் கயிற்றை இவர்கள் என்னிடம் வழங்க மறுத்தாலும் அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள். இது குறித்து உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை, போர் (தொடுப்பதன் மீது உறுதியான முடிவு) செய்வதற்காக அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததை நான் கண்டுகொண்டேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக்கொண்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் – (முஸ்லிம்: 32)

தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்ற அபூபக்ர் (ரலி)யின் உறுதியான நிலைப்பாடே, இஸ்லாம் அன்று சிதறாமல் காக்கப்பட்டதற்குக் காரணமாயிற்று.

தன் ஆரம்பக் கருத்தை மாற்றி, சரியானதை ஏற்றுக்கொண்ட உமர் (ரலி)யின் பணிவும் இங்கே பாடம்.