விரிப்பில் உறங்கிய நபியின் (ஸல்) வியர்வையைச் சேகரித்த உம்மு சுலைம் (ரலி)

ஹதீஸ் சம்பவங்கள்

“அதன் வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம்”

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ بَيْتَ أُمِّ سُلَيْمٍ فَيَنَامُ عَلَى فِرَاشِهَا، وَلَيْسَتْ فِيهِ، قَالَ: فَجَاءَ ذَاتَ يَوْمٍ فَنَامَ عَلَى فِرَاشِهَا، فَأُتِيَتْ فَقِيلَ لَهَا: هَذَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَامَ فِي بَيْتِكِ، عَلَى فِرَاشِكِ، قَالَ فَجَاءَتْ وَقَدْ عَرِقَ، وَاسْتَنْقَعَ عَرَقُهُ عَلَى قِطْعَةِ أَدِيمٍ، عَلَى الْفِرَاشِ، فَفَتَحَتْ عَتِيدَتَهَا فَجَعَلَتْ تُنَشِّفُ ذَلِكَ الْعَرَقَ فَتَعْصِرُهُ فِي قَوَارِيرِهَا، فَفَزِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا تَصْنَعِينَ؟ يَا أُمَّ سُلَيْمٍ» فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ نَرْجُو بَرَكَتَهُ لِصِبْيَانِنَا، قَالَ: «أَصَبْتِ»

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இல்லத்துக்கு வந்து, அங்கு உம்மு சுலைம் (படுத்து) இராதபோது அவர்களது விரிப்பில் படுத்து உறங்குவார்கள். ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வந்து உம்மு சுலைமின் விரிப்பில் படுத்துறங்கினார்கள். அப்போது அங்கு வந்த உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், “இதோ நபி (ஸல்) அவர்கள் உங்கள் வீட்டில் உங்கள் விரிப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லப்பட்டது.

உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் வந்(து பார்த்)தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வியர்த்திருந்தது. அவர்களது வியர்வை, படுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்மு சுலைம், தமது நறுமணப் பெட்டியைத் திறந்து, அந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் திடுக்கிட்டு விழித்து, “உம்மு சுலைமே! என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே!

அதன் வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “நீ செய்தது சரிதான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் – (முஸ்லிம்: 4656)

நபி (ஸல்) அவர்கள் தன் வீட்டில் உறங்கியதே உம்மு சுலைம் (ரலி)க்குப் பெரிய நிகழ்வு. அதற்கு மேல், அவர்களின் வியர்வையைச் சேகரிக்கும் அளவுக்கு அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள். இது மூடநம்பிக்கை அல்ல — நபியைப் பற்றிய அவர்களின் ஆழ்ந்த நேசத்தின் இயல்பான வெளிப்பாடு.

திடுக்கிட்டு விழித்த நபி (ஸல்) அவர்கள் காரணம் கேட்டதும், உம்மு சுலைம் தயங்காமல் பதில் சொன்னார்கள். அதை நபி (ஸல்) கண்டித்துவிடவில்லை; “நீ செய்தது சரிதான்” என்று ஆமோதித்தார்கள். நேசத்தை வெளிப்படுத்துவதில் தயக்கம் தேவையில்லை என்பதையும், நேர்மையான அன்பை நபி (ஸல்) எப்போதும் மதித்தார்கள் என்பதையும் இது காட்டுகிறது.