விண்வெளியில் தாவரங்களை வளர்க்க முடியுமா?
விண்வெளியில் மனிதர்கள் நீண்ட நாட்கள் தங்க வேண்டும் என்றால், உணவு, உயிர்வளி (ஆக்சிஜன்) மற்றும் மனநிறைவு மிக முக்கியம். இவற்றைத் தரும் தாவரங்களை விண்வெளியில் வளர்ப்பது ஒரு பெரிய சவால். ஆனாலும், விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக இந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றியும் கண்டுள்ளனர்.
தாழ் விண்வெளி சுற்றுப்பாதையில் (low Earth orbit) எடுத்துச் செல்லப்பட்ட தாவரங்கள், எடையற்ற சூழலில் வளர்க்கப்பட்டன. இவை ‘விண்வெளித் தோட்டங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. 1982-ல் சோவியத் ஒன்றியத்தின் சால்யூட் 7 விண்வெளி நிலையத்தில், அராபிடாப்சிஸ் (Arabidopsis) என்ற சிறிய பூக்கும் தாவரம் பூத்துக் காய்த்தது. விண்வெளியில் பூத்து விதை உற்பத்தி செய்த முதல் தாவரம் இதுதான்.
சோவியத் ஒன்றியத்தின் மிர் விண்வெளி நிலையத்தில், விதையிலிருந்து தாவரம், அந்தத் தாவரத்திலிருந்து விதை என்ற முழு வளர்ச்சி சுழற்சி வெற்றிகரமாக நடந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் தாங்களே வளர்த்து அறுவடை செய்த ‘ரெட் ரோமெய்ன்’ கீரையைச் சாப்பிட்டனர். சீனாவின் சாங்இ 4 (Chang’e 4) ஆய்வுக் கலம், நிலவில் முதன்முதலாகப் பருத்தி விதையை முளைக்க வைத்தது.
விண்வெளிப் பயணங்களில் தாவரங்களால் பல பயன்கள் உண்டு. அவற்றை உணவாக உட்கொள்ளலாம். அவை காற்றைப் புத்துணர்வுடன் வைத்திருக்கும். காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை (carbon dioxide) உயிர்வளியாக மாற்றும். அறை ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும். மேலும், விண்வெளி வீரர்களின் மன நலத்துக்கும் தாவரங்கள் பெரிதும் உதவுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதற்கான முதல் சவால் புவி ஈர்ப்பு விசை (gravity) இல்லாததுதான். இது வேர் வளர்ச்சி, மண் ஒருங்கிணைப்பு மற்றும் நீர்ப்பாய்ச்சுதல் ஆகிய மூன்று சவால்களை உருவாக்குகிறது. பூமியில் விதை முளைக்கும்போது வேர்கள் கீழ்நோக்கியும், துளிர்கள் மேல்நோக்கியும் செல்லும். புவி ஈர்ப்பு விசை இந்தத் திசையை வழிநடத்துகிறது.
ஆனால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலையான வீழ்ச்சி நிலை (free fall) நிலவுவதால், எடை இல்லை. எனவே ‘மேல்’ அல்லது ‘கீழ்’ என்ற திசை இல்லை. ஈர்ப்பு விசையின் இழுவையை உணர முடியாது. இந்தச் சவால் சூழலிலும் விளக்கொளி போன்ற பிற குறிகளைப் பயன்படுத்தி தாவரங்கள் எந்தப் பக்கத்தில் துளிர்விடுவது, எந்தத் திசையில் வேர்களை வளர்ப்பது என்பதை முடிவு செய்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பூமியில் எடை காரணமாக மண் துகள்கள் ஒன்றுடன் மற்றொன்று ஒட்டியபடி அடர்த்தியாக இருக்கும். ஆனால், விண்வெளியில் மண் உலர்ந்திருக்கும்போது, மண்துகள்கள் பிரிந்து எல்லாத் திசைகளிலும் பறக்கும். எனவே, மண்ணை ஒன்றாக வைத்திருக்க நுண்வலை போன்ற கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. விண்வெளியில் எடை இல்லாததால் நீர் மண்ணிலிருந்து வெளியேறி மிதந்து செல்லும். எனவே, தாவரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் ஒரு முக்கியச் சவால்.
மிகக் குறைந்த அளவு புவி ஈர்ப்பு விசையையும் தாவரங்கள் உணர முடியும் என்பதை விண்வெளித் தோட்டச் சோதனைகள் கண்டறிந்துள்ளன. புவி ஈர்ப்பு விசை இல்லாவிட்டாலும், சூரியகாந்தி நாற்றுகள் சுழற்சி வளர்ச்சியையும் சுற்றித்தலையசைப்பையும் (circumnutation) வெளிப்படுத்தின. இந்தத் தாவர வளர்ச்சி நடத்தைகள் இயற்கையானவை என்பதை இது காட்டியது.
செவ்வாய் அல்லது நிலவில் மனிதக் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்றால், தாவரங்களை வளர்ப்பது இன்றியமையாதது. ஆழ்வெளிப் பயணங்களில் (deep-space missions), விண்வெளி வீரர்கள் உணவு, உயிர்வளி மற்றும் கழிவு மறுசுழற்சிக்குத் தாவரங்களை நம்பியிருக்க வேண்டி இருக்கும். எனவே, இந்தச் சோதனைகள் எதிர்காலத்திற்குப் பெரிதும் உதவும்.
இறைவன் தனது அளவற்ற ஞானத்தால் இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் உள்ள ஒவ்வொரு படைப்பையும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குடன் படைத்துள்ளான். புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும் தாவரங்கள் உயிர்வாழ வழிவகை செய்துள்ள அவனது ஆற்றலை எண்ணிப் பார்ப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை