வாளை மூன்று முறை கேட்ட சஅத் (ரலி)க்கு நபி (ஸல்) சொன்னது
“எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிடு”
نَزَلَتْ فِيَّ أَرْبَعُ آيَاتٍ: أَصَبْتُ سَيْفًا، فَأَتَى بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، نَفِّلْنِيهِ، فَقَالَ: «ضَعْهُ»، ثُمَّ قَامَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ضَعْهُ مِنْ حَيْثُ أَخَذْتَهُ»، ثُمَّ قَامَ، فَقَالَ: نَفِّلْنِيهِ يَا رَسُولَ اللهِ، فَقَالَ: «ضَعْهُ»، فَقَامَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، نَفِّلْنِيهِ، أَؤُجْعَلُ كَمَنْ لَا غَنَاءَ لَهُ؟ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ضَعْهُ مِنْ حَيْثُ أَخَذْتَهُ»، قَالَ: فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {يَسْأَلُونَكَ عَنِ الْأَنْفَالِ قُلِ الْأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ} [الأنفال: 1]
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் விஷயத்தில் நான்கு இறைவசனங்கள் அருளப்பெற்றன. நான் (குமுஸ் நிதியிலிருந்து) வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்”என்று கேட்டேன். நபியவர்கள் “அதை வைத்துவிடு” என்றார்கள். பிறகு நான் (அதை அன்பளிப்பாகத் தருமாறு கேட்டு) எழுந்து நின்றேன். நபியவர்கள் “எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிடு” என்று சொன்னார்கள். பிறகு மீண்டும் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே!
அதை எனக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “(இல்லை) அதை வைத்துவிடு” என்றார்கள். பிறகும் நான் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிடுங்கள். போதுமென்ற மனமில்லாத ஒருவனாக நான் கருதப்படுகிறேனா?” என்று கூறினேன். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிடு” என்று கூறினார்கள். அப்போதுதான் “(நபியே!) போர்க் களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் செல்வங்களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.
போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் செல்வங்கள் (பற்றி முடிவு செய்யும் அதிகாரம்) அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் உரியது எனறு கூறுவீராக!” (8:1➚) எனும் இந்த வசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 3597) ➚
தான் விரும்பியதை மூன்று முறை கேட்டும் மறுக்கப்பட்டபோது, சஅத் (ரலி) அவர்கள் தம் மனக்குறையை மறைக்காமல் வெளிப்படையாகவே நபியவர்களிடம் தெரிவித்தார்கள். நேர்மையான கேள்வி கேட்பது நம்பிக்கைக் குறைவல்ல என்பதை இது காட்டுகிறது.
ஒரு தனிமனிதனின் விருப்பத்தையும் தாண்டி, சமூகம் முழுவதற்குமான நியாயத்தை அல்லாஹ் தெளிவுபடுத்தி வைத்தான். நமக்கு நியாயமெனத் தோன்றும் கோரிக்கை உடனே நிறைவேறாதபோதும், அதற்குப் பின்னால் ஒரு பெரிய ஞானம் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.