லைலத்துல் கத்ர் இரவில் பெய்த மழையும் நபியின் நெற்றியில் படிந்த களிமண்ணும்

ஹதீஸ் சம்பவங்கள்

“தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் செய்வதைப் போல் எனக்குக் காட்டப்பெற்றது”

تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ، فَأَتَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللهُ عَنْهُ، وَكَانَ لِي صَدِيقًا، فَقُلْتُ: أَلَا تَخْرُجُ بِنَا إِلَى النَّخْلِ؟ فَخَرَجَ وَعَلَيْهِ خَمِيصَةٌ فَقُلْتُ لَهُ: سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ لَيْلَةَ الْقَدْرِ؟ فَقَالَ: نَعَمْ، اعْتَكَفْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَشْرَ الْوُسْطَى مِنْ رَمَضَانَ، فَخَرَجْنَا صَبِيحَةَ عِشْرِينَ، فَخَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ، وَإِنِّي نَسِيتُهَا – أَوْ أُنْسِيتُهَا -، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ كُلِّ وِتْرٍ، وَإِنِّي أُرِيتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْيَرْجِعْ» قَالَ: فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً، قَالَ: وَجَاءَتْ سَحَابَةٌ فَمُطِرْنَا، حَتَّى سَالَ سَقْفُ الْمَسْجِدِ، وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ، وَأُقِيمَتِ الصَّلَاةُ، فَرَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِي الْمَاءِ وَالطِّينِ، قَالَ: حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ

– وحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، ح وحَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ كِلَاهُمَا عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ وَفِي حَدِيثِهِمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ انْصَرَفَ وَعَلَى جَبْهَتِهِ وَأَرْنَبَتِهِ أَثَرُ الطِّينِ

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என் நண்பராயிருந்தார்கள். அவர்களிடம், “நீங்கள் எங்களுடன் பேரீச்சந்தோப்புவரை புறப்பட்டுவரக் கூடாதா?” என்று கேட்டேன். உடனே புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் கறுப்புக் கம்பளியாடை அணிந்திருந்தார்கள். அவர்களிடம் “லைலத்துல் கத்ர் இரவு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?”

என்று கேட்டேன். அவர்கள், “ஆம், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தின் நடுப்பத்து நாட்களில் “இஃதிகாஃப்” இருந்தோம். இருபதாவது நாள் காலையில் நாங்கள் (பள்ளிவாசலில் இருந்து) வெளியேறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள்: எனக்கு லைலத்துல் கத்ர் இரவு (கனவில்) காட்டப் பெற்றது. ஆனால், அதை நான் மறந்துவிட்டேன். (அல்லது அதை மறக்கவைக்கப்பட்டேன்.) எனவே, ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் ஒற்றைப்படையான ஒவ்வோர் இரவிலும் அதை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள்.

நான் (அந்த இரவில்) தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று எனக்குக் காட்டப்பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “இஃதிகாஃப்” இருந்தவர் மறுபடியும் (பள்ளிவாசலுக்கு) வரட்டும்!” என்றார்கள். நாங்கள் மீண்டும் சென்றோம். அப்போது வானில் மழை மேகத்தின் ஒரு துண்டைக்கூட நாங்கள் காணவில்லை. (திடீரென) ஒரு மேகம் (திரண்டு) வந்தது; எங்களுக்கு மழை பெய்தது. பள்ளிவாசலின் கூரையிலிருந்து மழை நீர் சொட்டியது. அப்போதைய கூரை பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது.

தொழுகைக்காக “இகாமத்” சொல்லப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்ததை நான் கண்டேன். அவர்களது நெற்றியில் களிமண் படிந்திருந்ததைக் கண்டேன். – அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பிய போது அவர்களை நான் கண்டேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் – (முஸ்லிம்: 2171)

ரமளானின் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருந்த நபி (ஸல்) அவர்கள், தமக்குக் காட்டப்பட்ட லைலத்துல் கத்ர் இரவை மறந்துவிட்டதாகச் சொல்லி, தோழர்களை மீண்டும் பள்ளிவாசலுக்கு அழைத்தார்கள். வானில் மேகத் துண்டு கூட இல்லாத அந்த நேரத்தில், தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் செய்வதைப் போலக் காட்டப்பெற்றதாக அவர்கள் சொன்னது எவருக்கும் புரியாத ஒரு அடையாளமாகவே இருந்திருக்கும். ஆனாலும் அந்த வார்த்தையை நம்பி அவர்கள் மீண்டும் திரும்பினார்கள்.

சற்று நேரத்திலேயே மேகம் திரண்டு மழை பெய்தது; பேரீச்ச மட்டையால் வேயப்பட்ட பள்ளிக்கூரையிலிருந்து நீர் சொட்டியது. தொழுகையில் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் படிந்த களிமண்ணைக் கண்களால் கண்டபோதுதான், அவர்கள் முன்பு சொன்ன வார்த்தை நிஜமானது என அபூசயீத் (ரலி) அவர்களுக்குப் புரிந்தது. நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் சரியாக நிறைவேறும் என்பதற்கு, கண்ணால் கண்ட இந்தச் சான்றைவிடச் சிறந்தது வேறு என்ன வேண்டும்?