மூன்று ஜனாஸாக்கள், ஒரே கேள்வி — கடனாளிக்காகப் பொறுப்பேற்ற அபூகதாதா (ரலி)

ஹதீஸ் சம்பவங்கள்

“இவரின் கடனுக்கு நான் பொறுப்பு; தொழுகை நடத்துங்கள்”

كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ أُتِيَ بِجَنَازَةٍ، فَقَالُوا: صَلِّ عَلَيْهَا، فَقَالَ: «هَلْ عَلَيْهِ دَيْنٌ؟»، قَالُوا: لاَ، قَالَ: «فَهَلْ تَرَكَ شَيْئًا؟»، قَالُوا: لاَ، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، صَلِّ عَلَيْهَا، قَالَ: «هَلْ عَلَيْهِ دَيْنٌ؟» قِيلَ: نَعَمْ، قَالَ: «فَهَلْ تَرَكَ شَيْئًا؟»، قَالُوا: ثَلاَثَةَ دَنَانِيرَ، فَصَلَّى عَلَيْهَا، ثُمَّ أُتِيَ بِالثَّالِثَةِ، فَقَالُوا: صَلِّ عَلَيْهَا، قَالَ: «هَلْ تَرَكَ شَيْئًا؟»، قَالُوا: لاَ، قَالَ: «فَهَلْ عَلَيْهِ دَيْنٌ؟»، قَالُوا: ثَلاَثَةُ دَنَانِيرَ، قَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، قَالَ أَبُو قَتَادَةَ صَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ وَعَلَيَّ دَيْنُهُ، فَصَلَّى عَلَيْهِ

சலமா பின் அக்வஃ (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள் ‘நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவர் கடனாளியா?’ என்று கேட்டபோது நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். ‘ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று நபி(ஸல்) கேட்டபோது ‘இல்லை’ என்றனர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ‘இறைத்தூதர் அவர்களே!

இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘நபி(ஸல்) அவர்கள் ‘இவர் கடனாளியா?’ என்று கேட்டபோது ‘ஆம்’ எனக் கூறப்பட்டது. ‘இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது ஆம் மூன்று தங்க காசுகள் என்று நபித்தேழர்கள் கூறினர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மூன்றாவதாக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ‘இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபித்தோழர்கள் கேட்டனர்.

அதற்கு ‘நபி(ஸல்) அவர்கள் ‘இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது ‘இல்லை’ என்றனர். ‘இவர் கடனாளியா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது ‘மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்’ என்று நபித்தேழர்கள் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்’ என்றனர். அப்போது அபூ கதாதா(ரலி) ‘இவரின் கடனுக்கு நான் பொறுப்பு; தொழுகை நடத்துங்கள்’ என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: சலமா பின் அக்வஃ (ரலி)

நூல் – (புகாரி: 2289)

ஒருவர் இறந்தபின்னும் அவர்மீதிருந்த கடன் விஷயத்தை நபி (ஸல்) அவர்கள் மறக்கவில்லை; மனிதர்களுக்கிடையேயான உரிமைகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை ஜனாஸாத் தொழுகையிலேயே அவர்கள் கேட்டு உறுதிசெய்தது காட்டுகிறது.

யாரும் கேட்காமலேயே அபூகதாதா (ரலி) அவர்கள் அந்தக் கடனுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார்கள் — ஒரு தோழரின் இறுதிச் சுமையை இன்னொரு தோழர் தன் தோள்மேல் ஏற்றுக்கொண்ட தருணம் இது.