முற்றுகையிடப்பட்ட உஸ்மான் (ரலி) நினைவூட்டிய ரூமா கிணறும், ஒஸ்ரா படையும்
“ரூமாவைத் தூர்வாரியவருக்குச் சொர்க்கம் உண்டு” என்றார்கள் நபி (ஸல்); முற்றுகையிட்ட நாளில் அதை நினைவூட்டினார்கள் உஸ்மான் (ரலி)
أَنَّ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ حُوصِرَ أَشْرَفَ عَلَيْهِمْ، وَقَالَ: أَنْشُدُكُمُ اللَّهَ، وَلاَ أَنْشُدُ إِلَّا أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الجَنَّةُ»؟ فَحَفَرْتُهَا، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ قَالَ: «مَنْ جَهَّزَ جَيْشَ العُسْرَةِ فَلَهُ الجَنَّةُ»؟ فَجَهَّزْتُهُمْ، قَالَ: فَصَدَّقُوهُ بِمَا قَالَ وَقَالَ عُمَرُ فِي وَقْفِهِ: «لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ وَقَدْ يَلِيهِ الوَاقِفُ وَغَيْرُهُ فَهُوَ وَاسِعٌ لِكُلٍّ»
அபூ அப்திர் ரஹ்மான்(ரலி) அறிவித்தார். (கலீஃபா) உஸ்மான்(ரலி) (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டபோது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து), ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். ‘ரூமா’ என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா?
நபி(ஸல்) அவர்கள் ‘பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவியால்) தயார்படுத்துகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்’ என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?’ என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றனர். உமர்(ரலி) வக்ஃபு செய்தபோது, ‘இதை நிர்வாகம் செய்பவர் இதிலிருந்து (எடுத்து) உண்பதில் தவறில்லை’ என்று குறிப்பிட்டார்கள். வக்ஃபு செய்தவரே கூட அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகியாக இருக்கலாம். ஆக, (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு.
அறிவிப்பவர்: அபூ அப்திர் ரஹ்மான் (ரலி)
நூல் – (புகாரி: 2778) ➚
முற்றுகையிடப்பட்டு, மரணம் நெருங்கிய அந்த நேரத்தில் உஸ்மான் (ரலி) அவர்கள் தம்மைக் காப்பாற்றத் தம் செல்வத்தையோ செல்வாக்கையோ நினைவுகூரவில்லை; ஆண்டுகளுக்கு முன் தாம் செய்த இரு நல்ல செயல்களையே நினைவுகூர்ந்தார்கள். அன்று வெறும் நன்கொடையாகத் தோன்றிய அந்தச் செயல்கள், இன்று அவருக்காகச் சாட்சியம் சொல்லும் அளவுக்கு எடையுள்ளவையாக மாறியிருந்தன.
நாம் இன்று செய்யும் ஒவ்வொரு நல்ல செயலும் எந்த நாளில் நமக்குத் துணை நிற்குமென நமக்குத் தெரியாது. எனவே, பாராட்டுக்காகவோ பிரதிபலனுக்காகவோ காத்திராமல், இன்றே ஒரு நல்ல செயலைச் செய்து வைப்போம்; நமக்குத் தேவைப்படும் நாளில் அதுவே நமக்காகப் பேசும்.