மின்னல் தாக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

அறிவியல் உண்மைகள்

மின்னல் வெளியே தாக்கும்போது, வீட்டுக்குள்ளேயே இருப்பது பாதுகாப்பானது. ஒருவேளை நீங்கள் வெளியே இருக்கும்போது மின்னல் தாக்கத் தொடங்கினால், உடனடியாக வீட்டுக்குள் செல்ல வேண்டும். அல்லது மேற்பக்கம் மூடியுள்ள ஒரு அறைக்குள் அல்லது கூரையுள்ள காருக்குள் சென்று ஜன்னல்களை முழுவதுமாக மூடிக்கொண்டு உள்ளேயே இருக்க வேண்டும். வயலில் இருந்தால் மோட்டார் அறைக்குள் செல்லலாம்.

ஒளிந்துகொள்ள வீடோ, மறைவோ இல்லாதபோது, குத்தவைத்து அமர்ந்து (squatting position) கால்களை ஒன்றாக வைத்துக்கொண்டு தலையை உள்பக்கமாக சுருட்டி, காதுகளைக் கைகளால் மூடி அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டும். தரையில் படுக்கக்கூடாது.

தனியாக இருக்கும் மரங்கள், செல்போன் கோபுரங்கள், மலை முகடுகள் ஆகியவற்றின் கீழே நிற்கக்கூடாது. உயரமான இடங்களில் மின்னல் தாக்க வாய்ப்பு அதிகம். மின்சார கம்பிகள், இரும்பு வேலிகள், காற்றாலைகள் அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும். குளம், குட்டை, ஏரி, நீச்சல் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகிலும் இருக்கக்கூடாது.

வீட்டுக்குள் இருக்கும்போது, மின்னல் வெட்டினால் அல்லது இடி இடித்தால், வயர்களுடன் இணைந்திருக்கும் லேண்ட் லைன் தொலைப்பேசிகள், தொலைக்காட்சி பெட்டிகள் போன்ற எதையும் தொடக்கூடாது. ரேடியோ பயன்படுத்தக்கூடாது. ஆனால், செல்போன்கள் பயன்படுத்தலாம். மொட்டை மாடிக்குப் போகக்கூடாது.

மின்னல் அடிக்கும்போது வீட்டில் உள்ள தண்ணீர்க் குழாய்களைப் பயன்படுத்தக்கூடாது. பாத்திரம் கழுவுவது, ஷவரில் குளிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒருவேளை மின்னல் உங்கள் வீடு இருக்கிற கட்டடத்தைத் தாக்கினால், குழாய்கள் வழியாக மின்சாரம் பாய்ந்து நீர் வழியாக வருவதற்கு வாய்ப்பு அதிகம். மழை வேடிக்கை பார்க்கிறேன் என ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு அருகில் உட்காரக்கூடாது. கான்கிரீட் தரையில் நேரடியாக படுக்கக்கூடாது.

வீட்டுக்கு வெளியே செல்ல வேண்டுமென்றால், இடி, மின்னல் சத்தம் கேட்பது நின்று முப்பது நிமிடங்கள் கழித்தே செல்ல வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, ஒருவரை மின்னல் தாக்கி விட்டால், அவரை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அவரைத் தொடுவதால் எந்தப் பிரச்னையும் வராது என்பதால், அச்சமில்லாமல் உதவி செய்யலாம். மின்னலால் தாக்கப்பட்டவர்களுக்கு இதய செயலிழப்பு (cardiac arrest) ஏற்படும் வாய்ப்பு அதிகம். பாதிக்கப்பட்ட நபருக்கு இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து, ஒருவேளை இல்லாதபட்சத்தில், உடனே சிபிஆர் (CPR) முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இறைவன் தனது அளவற்ற ஞானத்தால் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் படைத்து, அதில் மனித குலத்திற்குப் பாதுகாப்பையும் வழிகளையும் அமைத்துள்ளான். மின்னல் போன்ற இயற்கையின் பேராற்றல் மிக்க நிகழ்வுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளை அவன் நமக்குக் காட்டியுள்ளான். அவனது படைப்பின் ஒழுங்கையும், அதில் பொதிந்துள்ள அருளையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆதாரம்: விகடன்