மறுமையில் நூஹ் (அலை) அளிக்கும் சாட்சியம் — “எடுத்துரைத்தேனா?”

ஹதீஸ் சம்பவங்கள்

“முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் எனக்காகச் சாட்சியம் சொல்வார்கள்”; நூஹ் (அலை) மறுமையில் அளிக்கும் பதில்

يَجِيءُ نُوحٌ وَأُمَّتُهُ، فَيَقُولُ اللَّهُ تَعَالَى، هَلْ بَلَّغْتَ؟ فَيَقُولُ نَعَمْ أَيْ رَبِّ، فَيَقُولُ لِأُمَّتِهِ: هَلْ بَلَّغَكُمْ؟ فَيَقُولُونَ لاَ مَا جَاءَنَا مِنْ نَبِيٍّ، فَيَقُولُ لِنُوحٍ: مَنْ يَشْهَدُ لَكَ؟ فَيَقُولُ: مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمَّتُهُ، فَنَشْهَدُ أَنَّهُ قَدْ بَلَّغَ، وَهُوَ قَوْلُهُ جَلَّ ذِكْرُهُ: وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَالوَسَطُ العَدْلُ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ் – அலை – அவர்களை நோக்கி), ‘(என்னுடைய செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்து விட்டீர்களா?’ என்று கேட்பான். அதற்கு நூஹ் அவர்கள், ‘ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)’ என்று பதிலளிப்பார்கள். பிறகு, அல்லாஹ் நூஹ் அவர்களின் சமுதாயத்தினரிடம், ‘இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்துவிட்டாரா?’

என்று கேட்பான். அதற்கு அவர்கள், ‘இல்லை. எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை’ என்று பதில் கூறுவார்கள். உடனே, அல்லாஹ் நூஹ் அவர்களிடம் ‘உங்களுக்காக சாட்சியம் சொல்பவர் யார்?’ என்று கேட்பான். நூஹ் அவர்கள், ‘முஹம்மத்(ஸல்) அவர்களும், அவர்களின் சமுதாயத்தினரும் (எனக்காக சாட்சியம் சொல்வார்கள்)’ என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே நாம் நூஹ் அவர்கள் (இறைச் செய்தியைத் தம் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்து விட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம்.

‘அவ்வாறே உங்களை மக்களுக்கு சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்’ என்னும் புகழுயர்ந்த இறைவனின் (அல்குர்ஆன்: 02:143)➚ வசனம் இதைத் தான் குறிக்கிறது. ‘நடுநிலையான’ என்னும் சொல்லின் கருத்து ‘நீதியான’ என்பதாகும். என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி)

நூல் – (புகாரி: 3339)

மறுமை நாளில் நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்திடம் செய்தியை எடுத்துரைத்தாரா என்று அல்லாஹ் கேட்கும்போது, அவருக்காகச் சாட்சியம் சொல்பவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களும் இந்தச் சமுதாயமும் தான் என்பது நமக்கு ஒரு பெரிய பொறுப்பை நினைவூட்டுகிறது. நேர்மையான சாட்சியமாக நிற்பதற்கு, நாமும் நேர்மையானவர்களாக வாழ வேண்டும்.

மற்றவர்களைப் பற்றி சாட்சியம் சொல்லும் தகுதி நமக்குக் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம் மட்டுமல்ல; அது ஒரு பொறுப்பும் கூட. நாம் அறிந்த உண்மையை மறைக்காமல் சொல்லும் பழக்கத்தை நம் அன்றாட வாழ்விலும் கடைப்பிடித்தால் தான், மறுமையிலும் நேர்மையான சாட்சிகளாக நிற்க முடியும்.