பேரீச்ச மரம் ஒட்டுச் சேர்க்கை நிறுத்தியதும் விளைச்சல் குறைந்ததும் — நபி (ஸல்) விளக்கம்
“மார்க்க விஷயத்தில் கட்டளையிட்டால் பின்பற்றுங்கள்; உலகியல் விஷயத்தில் நானும் ஒரு மனிதனே”
قَدِمَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، وَهُمْ يَأْبُرُونَ النَّخْلَ، يَقُولُونَ يُلَقِّحُونَ النَّخْلَ، فَقَالَ: «مَا تَصْنَعُونَ؟» قَالُوا: كُنَّا نَصْنَعُهُ، قَالَ: «لَعَلَّكُمْ لَوْ لَمْ تَفْعَلُوا كَانَ خَيْرًا» فَتَرَكُوهُ، فَنَفَضَتْ أَوْ فَنَقَصَتْ، قَالَ فَذَكَرُوا ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ، إِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ دِينِكُمْ فَخُذُوا بِهِ، وَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ مِنْ رَأْيِي، فَإِنَّمَا أَنَا بَشَرٌ» قَالَ عِكْرِمَةُ: أَوْ نَحْوَ هَذَا. قَالَ الْمَعْقِرِيُّ: فَنَفَضَتْ وَلَمْ يَشُكَّ
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள் “(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்துவருகிறோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம்” என்று சொன்னார்கள்.
ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் “உதிர்ந்துவிட்டன” அல்லது “குறைந்து விட்டன”. அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், “நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே” என்று சொன்னார்கள். (இவ்வாறே சொன்னார்கள்) அல்லது இதைப் போன்று சொன்னார்கள் என அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
அறிவிப்பவர்: ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 4712) ➚
மார்க்கக் கட்டளையும், தனிப்பட்ட கருத்தும் ஒன்றல்ல என்பதை நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்திய நிகழ்வு இது. விளைச்சல் குறைந்தபோது தயங்காமல் தம் யூகம் தவறு என ஒப்புக்கொண்டது அவர்களின் நேர்மையையும் உண்மைத் தன்மையையும் காட்டுகிறது.
மார்க்கம் சொல்வதையும், ஒருவரின் அனுபவக் கருத்தையும் நாம் தனித்தனியே அடையாளம் காணக் கற்றுக்கொள்ள வேண்டும். விவசாயம், மருத்துவம் போன்ற உலகியல் அறிவில் வல்லுநர்களை மதித்து, மார்க்க விஷயங்களில் மட்டும் முழுக் கீழ்ப்படிதலைக் காட்டுவதே சரியான வழி.