பேரீச்ச மட்டைத் துண்டைக் கூடத் தர மறுத்த நபி (ஸல்) — முஸைலிமாவிடம் சொன்ன உறுதி
“இந்தத் துண்டைக் கூட நீ கேட்டாலும் உனக்கு நான் தரமாட்டேன்”
قَدِمَ مُسَيْلِمَةُ الكَذَّابُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَقُولُ: إِنْ جَعَلَ لِي مُحَمَّدٌ الأَمْرَ مِنْ بَعْدِهِ تَبِعْتُهُ، وَقَدِمَهَا فِي بَشَرٍ كَثِيرٍ مِنْ قَوْمِهِ، فَأَقْبَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِطْعَةُ جَرِيدٍ، حَتَّى وَقَفَ عَلَى مُسَيْلِمَةَ فِي أَصْحَابِهِ، فَقَالَ: «لَوْ سَأَلْتَنِي هَذِهِ القِطْعَةَ مَا أَعْطَيْتُكَهَا، وَلَنْ تَعْدُوَ أَمْرَ اللَّهِ فِيكَ، وَلَئِنْ أَدْبَرْتَ ليَعْقِرَنَّكَ اللَّهُ، وَإِنِّي لَأَرَاكَ الَّذِي أُرِيتُ فِيكَ مَا رَأَيْتُ»
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். பெரும் பொய்யனான முஸைலிமா, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (யமாமாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தான். ‘முஹம்மது தமக்குப் பின் (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்குக் கொடுத்தால் தான் நான் அவரைப் பின்பற்றுவேன் (இல்லையென்றால் அவரை ஏற்க மாட்டேன்)’ என்று கூறத் தொடங்கினான். அவன் தன் குலத்தார் நிறையப் பேருடன் மதீனாவிற்கு வந்திருந்தான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ் (ரலி) அவர்களுடன் அவனிடம் சென்றார்கள்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டையின் துண்டு ஒன்று இருந்தது. அவர்கள் முஸைலிமா தன் சகாக்களுடன் இருக்க, அவனருகே சென்று நின்று கொண்டு, ‘இந்த (பேரீச்ச மட்டையின்) துண்டைக் கூட நீ என்னிடம் கேட்டாலும் உனக்கு நான் இதைத் தரமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத்தில் எடுத்துள்ள முடிவை (- உன் நோக்கத்தில் நீ வெல்ல முடியாது என்பதை -) நீ மீறிச் சென்றுவிட முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்துப் புறங்காட்டிச் சென்றால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான். உன் விஷயம் தொடர்பாக எனக்கு எவன் (கனவில்) காட்டப்பட்டானோ அவன்தான் நீ என்று கருதுகிறேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் – (புகாரி: 3620) ➚
முஸைலிமா தன்னுடன் ஏராளமான ஆட்களுடன் வந்து பாதி அதிகாரம் கேட்டபோதும், நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறு பேரீச்ச மட்டைத் துண்டைக் கூடக் கொடுக்க மறுத்தார்கள். உண்மையை விட்டு எந்த அளவு சிறிய சமரசமும் செய்யக்கூடாது என்பதை இந்தச் செயல் காட்டுகிறது.
பொய்யை உறுதியுடன் எதிர்கொள்ள, எதிரே நிற்பவர்களின் எண்ணிக்கையோ செல்வாக்கோ நம்மைப் பயமுறுத்தக் கூடாது. இறைவன் ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருப்பதை யாராலும் மாற்ற முடியாது என்ற உறுதியே நமக்குத் தைரியம் தரும்.