பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் ஏன் மாறுவதில்லை?

அறிவியல் உண்மைகள்

பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து வருவதாக நவீன வானியல் கூறுகிறது. ஆனால் கோள்களுக்கு இடையேயான தூரமோ, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவோ மாறுவதில்லை.

பிரபஞ்ச விரிவாக்கம் என்பது விண்வெளி (Fabric of Space) இழுத்து நீட்சியடைவதைக் குறிக்கிறது. இந்த விளைவு மிகப் பெரிய அளவுகளில், குறிப்பாக விண்மீன் மண்டலங்களுக்கு இடையேயான பரந்த இடைவெளியில் மட்டுமே கணிசமாக இருக்கும்.

தொலைதூர விண்மீன் மண்டலங்கள் நம்மிடமிருந்து விரைவாக விலகிச் செல்வதாகத் தெரிகிறது. இன்னும் தொலைவில் உள்ளவை மேலும் வேகமாக விலகுகின்றன. ஒரு பலூன் விரிவடையும்போது, அதன் மேற்பரப்பில் உள்ள புள்ளிகளுக்கு இடையேயான தூரம் அதிகரிப்பதைப் போல இது இருக்கும்.

ஆனால், உலர்திராட்சை கலந்த கேக் மாவு அடுப்பில் சுடப்பட்டு விரிவடையும்போது, அதனுள் இருக்கும் உலர்திராட்சையின் அளவு பெரிதாகாது. ஓர் உலர்திராட்சையிலிருந்து அடுத்த உலர்திராட்சைக்கான இடைவெளி மட்டும் அதிகரிக்கும். இதேபோல, பிரபஞ்ச விரிவாக்கத்தில் விண்வெளி எனும் ‘கேக் மாவு’ நீளும்; விண்மீன் மண்டலங்கள் எனும் ‘உலர்திராட்சைகள்’ தாமாக விரிவடையாது.

இந்த விரிவாக்கம் எங்கும் ஒரே சமமான வலிமையில் செயல்படுவதில்லை. இயற்பியலின் மற்ற விசைகளுடன், குறிப்பாக ஈர்ப்பு விசையுடன் (Gravitational Force) அதன் போட்டிதான் இறுதி முடிவை நிர்ணயிக்கிறது.

சிறிய அளவுகளில், அணுக்களின் அளவிலோ மனிதர்களின் அளவிலோ, மின்காந்த விசை (Electromagnetic Force) மற்றும் அணுக்கருப் பிணைப்பு விசைகள் (Nuclear Forces) மற்ற எல்லா விசைகளைவிடவும் மிகவும் வலிமையானவை. இந்த விசைகள், விண்வெளியின் விரிவாக்கம் காரணமாக உண்டாகும் நீட்சி விளைவை முற்றிலும் வென்று, அணுக்களை அல்லது உடல்களை ஒன்றாகப் பிணைத்து வைக்கின்றன. அதனால்தான் நமது உடலின் அணுக்களுக்கு இடையேயான தூரம் மாறுவதில்லை.

சூரிய மண்டலம் அல்லது விண்மீன் மண்டலத்தில் ஈர்ப்பு விசை கையோங்கி இருக்கும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை, அவற்றுக்கு இடையேயான விண்வெளித் தளத்தின் நீட்சி விளைவைவிடப் பல ஆயிரம் மடங்கு வலிமையானது. எனவே, பூமி சூரியனைச் சுற்றும் சுற்றுப்பாதைத் தொலைவு நிலையாக உள்ளது. நிலவும் பூமியைப் போலவே சூரியனைச் சுற்றி வருவதால், அவற்றுக்கு இடையேயான தூரமும் மாறாது.

மிகப் பெரிய அளவில், பல லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் மண்டலக் கொத்துகள் (Galaxy Clusters) இடையே, ஈர்ப்பு விசையின் பிணைப்பு மிகவும் பலவீனமாக இருக்கும். அங்குதான் விண்வெளித் தளத்தின் விரிவாக்கம் வெல்கிறது. அந்த மாபெரும் கட்டமைப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகிச் செல்வதை நம்மால் காண முடியும்.

பிரபஞ்ச விரிவாக்கம் என்பது ஒரு வலுவான விளைவுதான். ஆனால் அதன் தாக்கம் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. ஈர்ப்பு விசை, மின்காந்த விசை போன்றவை வலுவாக உள்ள இடங்களில், பிரபஞ்சத்தின் விரிவாக்கம் எனும் பின்னணி ஒலி முழுவதுமாக மறைந்துவிடுகிறது. அதேநேரம், ஈர்ப்பு விசை வலுவற்றுப் பிணைப்பு ஏற்படுத்தும் மாபெரும் பிரபஞ்சக் கட்டமைப்புகளில், பிரபஞ்ச விரிவாக்கத்தின் தாக்கமே மேலோங்கி இருக்கும்.

இறைவன் இந்த பிரபஞ்சத்தை எவ்வளவு துல்லியமாகப் படைத்து, ஒவ்வொரு விசையையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் செயல்பட வைத்துள்ளார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவனது படைப்பின் மகத்துவமும் ஞானமும் அளப்பரியது.

ஆதாரம்: இந்து தமிழ் திசை