பழங்களின் சுவை ஒரு இயற்கை விளம்பரம்!

அறிவியல் உண்மைகள்

பழங்களின் சுவை என்பது தாவரங்கள் தங்கள் விதைகளைப் பூமி முழுவதும் பரப்பப் பயன்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான இயற்கை உத்தி. தாவரங்களால் மனிதர்களைப் போலவோ விலங்குகளைப் போலவோ ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர முடியாது. அப்படியென்றால், அவற்றின் விதைகள் தூரமான இடங்களுக்கு எப்படிப் பயணம் செய்கின்றன? அதற்குத்தான் அவை விலங்குகளையும் பறவைகளையும் தங்களின் சொந்த ‘டெலிவரி பார்ட்னர்களாக’ மாற்றிக் கொள்கின்றன.

மரங்கள் ஒளிச்சேர்க்கை (Photosynthesis) மூலம் சூரிய ஒளியை உணவாகவும் சர்க்கரையாகவும் மாற்றுகின்றன. ஆனால், பழங்கள் ஆரம்பத்தில் காயாக இருக்கும்போது பச்சை நிறமாகவும், கசப்பாகவோ அல்லது மிகவும் புளிப்பாகவோ இருக்கும். உள்ளிருக்கும் விதை முழுமையாக வளரும் வரை அதை யாரும் பறித்துவிடக் கூடாது என்பதற்காகத் தாவரம் அமைக்கும் ஒரு ‘பாதுகாப்பு அரண்’ இது. பச்சை நிறம் இலைகளோடு ஒன்றிணைந்து மறைந்து கொள்ள உதவுகிறது.

விதை முழுமையாக முதிர்ந்ததும், தாவரம் எத்திலீன் (Ethylene) என்ற வாயுவை உற்பத்தி செய்து பழத்தைப் பழுக்க வைக்கிறது. அப்போது பச்சை நிறம் மறைந்து, விலங்குகளின் கண்களுக்கு எடுப்பாகத் தெரியும் வகையில் சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறுகிறது. இது காடுகளில் ஒளிரும் ஒரு பெரிய நியான் போர்டு விளம்பரம் போன்றது. கூடவே, அமிலங்கள் குறைந்து, பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுக்கோஸ் (Glucose) போன்ற இயற்கையான சர்க்கரை அதிகரித்து, ஈர்க்கும் நறுமணமும் வீசுகிறது.

விதைகளின் அளவுக்கு ஏற்பத் தாவரங்கள் தங்களின் பழங்களை வடிவமைக்கின்றன. பட்டாணி அல்லது கோலிக்குண்டு அளவு இருக்கும் சிறிய பெர்ரி பழங்களைச் சிட்டுக்குருவிகளும் மைனாக்களும் அப்படியே விழுங்கிவிடுகின்றன. ஒரு டென்னிஸ் பந்து அளவுள்ள கொய்யா அல்லது மாம்பழங்களை வௌவால்களும் அணில்களும் கடித்து உண்கின்றன. ஒரு கால்பந்து அளவுள்ள பலாப்பழம் மற்றும் தர்பூசணி போன்ற பெரிய பழங்களை யானை, குரங்கு போன்ற பெரிய விலங்குகள் விரும்பி உண்கின்றன.

விலங்குகள் சுவையான பழக்கூழை உண்டு ஆற்றலைப் பெறுகின்றன. விதைகளின் மேல் இருக்கும் கடினமான உறை, விலங்குகளின் வயிற்று அமிலத்தால் அழியாமல் பாதுகாக்கிறது. விலங்குகள் வெகுதூரம் நடந்து சென்று கழிக்கும் எச்சத்தின் மூலம் விதைகள் நிலத்தில் விழுகின்றன. இந்த முறைக்கு அறிவியலில் எண்டோசூகோரி (Endozoochory) என்று பெயர். இந்த எச்சமே அந்தச் செடிக்கு முதல் உரமாக மாறி புதிய தாவரம் வளர உதவுகிறது. தாவரத்திற்குத் தன் சந்ததியைப் பரப்பும் வழி கிடைக்கிறது; விலங்குகளுக்குச் சத்தான உணவு கிடைக்கிறது. இது இயற்கையில் நடக்கும் மிக அழகான ஒரு பரஸ்பர உதவி (Mutualism) ஆகும்.

இப்படி ஒரு சிறிய விதை பரவுவதற்காக, தாவரங்கள் நிறம், சுவை, மணம், அளவு எனப் பல உத்திகளைப் பயன்படுத்துகின்றன. இந்த நுட்பமான வடிவமைப்பைப் பார்க்கும்போது, அனைத்தையும் படைத்து, ஒழுங்குபடுத்திய இறைவனின் அளவற்ற ஞானத்தையும் ஆற்றலையும் நாம் வியக்காமல் இருக்க முடியாது.