பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் உயருமா?
துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உலக வெப்பமயமாதலால் உருகி வருகின்றன. இதனால் கடல் மட்டம் உயரும் என்பது உண்மைதான். உலகின் 98% நன்னீர் துருவங்களில்தான் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கிறது.
கடலில் உப்பு நீர் உள்ளது. உருகும் நன்னீர் கடலில் கலக்கும்போது, கடலின் உப்பு அளவு மாறும். கனமான உப்பு நீர் அடியிலும், லேசான நன்னீர் மேலேயும் இருக்கும். இதனால் கடலின் நீரோட்டமும், காற்றோட்டமும் மாறும். இது புவியின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
வடதுருவத்தில் உள்ள பனிப்பாறைகள் (Arctic ice sheets) கடலின் மேற்பரப்பில் மிதக்கின்றன. அவை உருகினாலும் கடல் மட்டத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால், கிரீன்லாந்து (Greenland) பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் சுமார் 6 மீட்டர் (20 அடி) வரை உயரக்கூடும். தென் துருவப் பாறைகள் (Antarctic ice sheets) மொத்தமாக உருகினால் கடல் மட்டம் சுமார் 60 மீட்டர் (200 அடி) வரை உயரும்.
பனிப்பாறைகள் சூரிய ஒளியைப் பூமிக்குத் திருப்பி அனுப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை இல்லாவிட்டால், சூரிய ஒளி கடற்பகுதியை நேரடியாக வெப்பமாக்கும். இதனால் வானிலை மிகவும் மோசமடையும். கடல் மட்டம் 60 மீட்டர் (200 அடி) வரை உயர்ந்தால், பல நிலப்பகுதிகள் கடலுக்கு அடியில் மூழ்கிவிடும். இதனால் பூமியின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அகதிகளாவார்கள்.
பனி உருகுவதால் துருவப் பகுதிகளில் வாழும் பனிக்கரடிகளின் (polar bears) வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவை அழிந்துபோகும் வாய்ப்புகள் அதிகம். பல நூறு ஆண்டுகளாக உறைந்திருந்த பகுதிகள் உருகும்போது புதிய நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. 2016 ஆம் ஆண்டில் சைபீரியாவில் (Siberia) ஒரு பனிப்பாறை உருகியபோது, அதனுள் உறைந்திருந்த கலைமானின் (reindeer) சடலத்தால் ஆந்த்ராக்ஸ் (Anthrax) நோய் பரவியது.
தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகக் குழுவின் (National Oceanic and Atmospheric Administration) அறிக்கையின்படி, தற்போதைய மாசுபாடு தொடர்ந்தால், 2050 ஆம் ஆண்டில் கடல் மட்டம் சுமார் 1.4 மீட்டர் (4.5 அடி) வரை உயரும். 2100 ஆம் ஆண்டில் இது இரண்டு மடங்காக உயரும். கடல் மட்டம் உயர்ந்தால் மாலத்தீவுகள், கிரிபாட்டி, மார்ஷல் தீவுகள், துவாலு, அந்தமான் நிக்கோபார் போன்ற பகுதிகள் கடலில் மூழ்கிவிடும். ஐ.நா.வின் கூற்றுப்படி, 2050 ஆம் ஆண்டில் 15 கோடி மக்கள் சூழலியல் அகதிகளாவார்கள்.
வட அமெரிக்காவில் வான்கூவர், சியாட்டல், போர்ட்லாந்து போன்ற நகரங்கள் இருக்காது. லாஸ் ஏஞ்சல்ஸ், சான் டியாகோ போன்ற நகரங்களின் பெரும்பாலான பகுதிகள் கடலுக்குள் இருக்கும். ஐரோப்பாவில் நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகள் அழிந்துவிடும். லண்டன், வடக்கு ஜெர்மனி அனைத்தும் கடலுக்கு அடியில் இருக்கும். இந்தியாவில் அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள் இருக்காது. ராமேஸ்வரம் முழுவதும் கடலுக்குள் செல்லும். பங்களாதேஷிற்கு மிக அதிக பாதிப்புகள் ஏற்படும்.
இந்த மாற்றங்கள் நிகழ இன்னும் சுமார் 5000 ஆண்டுகள் ஆகும். இது நடக்காமல் தடுக்க முடியாது; வேண்டுமானால் தாமதப்படுத்தலாம். இதற்கு புதைபடிவ எரிபொருள்களின் (fossil fuels) பயன்பாட்டைக் குறைத்து, கரிம வாயுக்கள் (carbon gases) காற்றுடன் கலப்பதைத் தடுக்க வேண்டும். பாரிஸ் காலநிலை மாற்றம் உச்சி மாநாட்டில் (Paris Climate Change Summit) 195 உலக நாடுகள் மாசுபாடுகளைக் குறைப்பதாக உறுதி அளித்துள்ளன. இந்த முயற்சிகள் தொடர்ந்தால் வரவிருக்கும் பேரழிவுகளைக் கட்டுப்படுத்தலாம்.
இறைவன் இந்த உலகத்தை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குடன் படைத்துள்ளான். இயற்கையின் சமநிலையை நாம் பாதுகாக்கும்போது, அது நமக்கு நன்மையை அளிக்கிறது. இந்த பிரம்மாண்டமான மாற்றங்களைச் சிந்திக்கும்போது, இறைவனின் ஆற்றலையும் ஞானத்தையும் நாம் உணர்கிறோம்.
ஆதாரம்: விகடன்