நிழல் இல்லாத நாள் என்றால் என்ன?
சூரியன் நம் தலைக்கு நேர் மேலே வரும்போது, நம் நிழல் நம் காலுக்குக் கீழே இருக்கும். அதாவது, நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். இதைத்தான் ‘நிழல் இல்லாத நாள்’ என்கிறோம்.
சூரியன் தினமும் நம் தலைக்கு நேர் மேலே வருவதில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஆண்டுக்கு இரு முறை மட்டுமே சூரியன் சரியாக தலைக்கு மேலே வரும்.
இந்த நிழல் இல்லாத நாளை மகர ரேகைக்கும் (Tropic of Capricorn) கடக ரேகைக்கும் (Tropic of Cancer) இடையில் உள்ள நாடுகளில் மட்டுமே காண முடியும். மேலும், எல்லா இடங்களிலும் ஒரே நாளில் இது நிகழ்வதில்லை.
இந்த ஆண்டு, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு தேதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிழல் இல்லாத நாள் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி மாவட்டத்தில் நிழல் இல்லாத நாள் உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் ஆகஸ்ட் 25 அன்று நிழல் இல்லாத நாள் நிகழ்ந்தது. மதுரையில் ஆகஸ்ட் 27 அன்று இதைக் காண முடிந்தது. இதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த நாள் எப்போது வருகிறது என்பதை தமிழ்நாடு அறிவியல் இயக்க இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த நிகழ்வை வானியல் மன்றத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் திறந்தவெளி மைதானத்தில் நின்று கொண்டு, பல்வேறு பொருட்களைக் கொண்டு சூரியனின் நிழலை அளந்து பார்த்து, நிழல் பூஜ்ஜியமாக வந்ததை உறுதி செய்தனர்.
இறைவன் சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்லும்படி படைத்துள்ளான். அதன் மூலம் பூமியில் நிழல்கள் உருவாகின்றன, சில நாட்களில் அவை மறைந்து போகின்றன. இது இறைவனின் அளவற்ற ஆற்றலையும், அவன் படைப்பின் துல்லியத்தையும் காட்டுகிறது.
ஆதாரம்: தினமணி