நற்செய்தியை மறுத்த கிராமவாசி — பிலால் (ரலி), அபூமூசா (ரலி) பெற்ற அருள் நீர்

ஹதீஸ் சம்பவங்கள்

“இவர் நற்செய்தியை ஏற்க மறுத்துவிட்டார்; நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்”

كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ نَازِلٌ بِالْجِعْرَانَةِ بَيْنَ مَكَّةَ وَالمَدِينَةِ، وَمَعَهُ بِلاَلٌ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ فَقَالَ: أَلاَ تُنْجِزُ لِي مَا وَعَدْتَنِي؟ فَقَالَ لَهُ: «أَبْشِرْ» فَقَالَ: قَدْ أَكْثَرْتَ عَلَيَّ مِنْ أَبْشِرْ، فَأَقْبَلَ عَلَى أَبِي مُوسَى وَبِلاَلٍ كَهَيْئَةِ الغَضْبَانِ، فَقَالَ: «رَدَّ البُشْرَى، فَاقْبَلاَ أَنْتُمَا» قَالاَ: قَبِلْنَا، ثُمَّ دَعَا بِقَدَحٍ فِيهِ مَاءٌ، فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ وَمَجَّ فِيهِ، ثُمَّ قَالَ: «اشْرَبَا مِنْهُ، وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا وَنُحُورِكُمَا وَأَبْشِرَا». فَأَخَذَا القَدَحَ فَفَعَلاَ، فَنَادَتْ أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ: أَنْ أَفْضِلاَ لِأُمِّكُمَا، فَأَفْضَلاَ لَهَا مِنْهُ طَائِفَةً

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். மக்காவுக்கும் மதீனாவிற்குமிடையே ‘ஜிஃரானா’ என்னுமிடத்தில் பிலால்(ரலி) அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் தங்கியிருந்தபோது நான் அவர்களிடம் இருந்தேன். அப்போது கிராமவாசி ஒருவர் (நபி -ஸல் – அவர்களிடம்) வந்து, ‘நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘நற்செய்தியைப் பெற்றுக் கொள்’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘இந்த நற்செய்தியைத் தான் எனக்கு நீங்கள் நிறையச் சொல்லிவிட்டீர்களே!’

என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் கோபமடைந்தவரைப் போன்று என்னையும் பிலால்(ரலி) அவர்களையும் நோக்கி வந்தார்கள். ‘இவர் (என்னுடைய) நற்செய்தியை ஏற்க மறுத்துவிட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். நாங்கள் இருவரும், ‘நாங்கள் ஏற்றுக் கொண்டோம்’ என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள் . பிறகு (எங்களிடம்), ‘இதிலிருந்து சிறிது அருந்திவிட்டு, ‘உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

எனவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, ‘(இறை நம்பிக்கையாளர்களான) உங்களின் அன்னை(யான என)க்காகவும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல் – (புகாரி: 4328)

அல்லாஹ்வின் தூதரே நேரடியாகக் கொடுத்த நற்செய்தியைக் கூட அலுப்புடன் தட்டிக் கழித்தார் அந்தக் கிராமவாசி. அதே நேரம், பிலால் (ரலி), அபூமூசா (ரலி) ஆகியோர் ஒரு வினாடி கூடத் தயங்காமல் “ஏற்றுக் கொண்டோம்” என்றார்கள். மறுப்பவருக்குக் கிடைக்காதது ஏற்பவருக்குக் கிடைக்கும் என்பதற்கு இதைவிட நல்ல எடுத்துக்காட்டு வேண்டுமா?

திரைக்குப் பின்னால் இருந்த உம்மு ஸலமா (ரலி) கூடத் தமக்கும் அதில் பங்கு வேண்டுமெனக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். நல்லதை நாடுவதில் தயக்கம் தேவையில்லை; வாய்ப்பு வரும்போது அதைப் பற்றிக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இந்தச் சிறு காட்சி நமக்குக் கற்றுத் தருகிறது.