நறுமணம் பூசி முடித்துவிட்டுப் போர்க்களம் சென்ற ஸாபித் இப்னு கைஸ் (ரலி) — யமாமாவில் பின்வாங்காதது

ஹதீஸ் சம்பவங்கள்

“நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இருந்த பொழுது இப்படிப் பின்வாங்கி (ஓடி)யதில்லை”

وَذَكَرَ يَوْمَ اليَمَامَةِ – قَالَ: أَتَى أَنَسٌ ثَابِتَ بْنَ قَيْسٍ وَقَدْ حَسَرَ عَنْ فَخِذَيْهِ وَهُوَ يَتَحَنَّطُ، فَقَالَ: يَا عَمِّ، مَا يَحْبِسُكَ أَنْ لاَ تَجِيءَ؟ قَالَ: الآنَ يَا ابْنَ أَخِي، وَجَعَلَ يَتَحَنَّطُ – يَعْنِي مِنَ الحَنُوطِ – ثُمَّ جَاءَ، فَجَلَسَ، فَذَكَرَ فِي الحَدِيثِ، انْكِشَافًا مِنَ النَّاسِ، فَقَالَ: هَكَذَا عَنْ وُجُوهِنَا حَتَّى نُضَارِبَ القَوْمَ، «مَا هَكَذَا كُنَّا نَفْعَلُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِئْسَ مَا عَوَّدْتُمْ أَقْرَانَكُمْ»

மூஸா இப்னு அனஸ்(ரஹ்) யமாமா போரை நினைவு கூர்ந்த வண்ணம் கூறினார். (என் தந்தை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஸாபித் இப்னு கைஸ்(ரலி) தம் தொடைகளைத் திறந்து நறுமணம் பூசிக் கொண்டிருந்தார்கள். அனஸ்(ரலி), ‘என் சிற்றப்பாவே! நீங்கள் (அறப் போருக்கு) ஏன் வரவில்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இதோ! இப்போது வருகிறேன்’ என்று கூறிவிட்டு நறுமணம் பூசத் தொடங்கிவிட்டார்கள். பிறகு வந்து (அறப்போர் வீரர்களுடன்) உட்கார்ந்துவிட்டார்கள்.

அப்போது மக்கள் தோற்றுப் பின்வாங்கியதாக (என் தந்தை) கூறினார்கள் – (மக்கள் தோற்றுப் பின்வாங்குவதைக் கண்ட) ஸாபித்(ரலி), ‘எனக்கு விலகி வழிவிடுங்கள். நான் எதிரிகளுடன் போரிடுவேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இருந்த பொழுது இப்படிப் பின்வாங்கி (ஓடி)யதில்லை. நீங்கள் உங்கள் எதிரிகளுக்குப் பழக்கப்படுத்தும் இந்த விஷயம் (நீங்கள் பின்வாங்கியோட, அவர்கள் உங்களை விரட்டி வரும் இந்த குணம்) மிக மோசமானது’ என்று கூறினார்கள். இதை ஹம்மாத்(ரஹ்) அவர்களும் ஸாபித் அல் புனானி(ரஹ்) என்பவர் வாயிலாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்.

அறிவிப்பவர்: மூஸா இப்னு அனஸ் (ரஹ்)

நூல் – (புகாரி: 2845)

பீதியில் அவசரப்படாமல், தொடங்கிய வேலையை முடித்துவிட்டே புறப்பட்ட ஸாபித் (ரலி) அவர்களின் அமைதி கவனிக்கத்தக்கது. சுற்றியிருப்பவர்கள் பீதியடையும் தருணத்திலும் மனதைக் கலங்காமல் வைத்திருப்பவரே உண்மையான தைரியசாலி.

பின்வாங்குவது ஒரு பழக்கமாகிவிட்டால், அது எதிரிக்கு நம்மைத் துரத்தும் தைரியத்தையே கொடுத்துவிடும் என்ற ஸாபித் (ரலி)யின் எச்சரிக்கை, போர்க்களத்திற்கு மட்டுமல்ல, சவால்களுக்கு முன் நாம் நிற்கும் விதத்திலும் நாம் சிந்திக்க வேண்டிய பாடம்.