நரகத்தைக் குறிப்பிட்டதும் முகம் திருப்பிய நபி (ஸல்) — “பேரீச்சம் பழத் துண்டேனும் தர்மம் செய்யுங்கள்”
“பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள்”
ذَكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّارَ فَأَعْرَضَ وَأَشَاحَ، ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ» ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ كَأَنَّمَا يَنْظُرُ إِلَيْهَا، ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَمَنْ لَمْ يَجِدْ، فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ» وَلَمْ يَذْكُرْ أَبُو كُرَيْبٍ، كَأَنَّمَا، وَقَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ
– وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ ذَكَرَ النَّارَ فَتَعَوَّذَ مِنْهَا، وَأَشَاحَ بِوَجْهِهِ ثَلَاثَ مِرَارٍ، ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدُوا، فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ»
அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். பின்னர் “நரகத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். பிறகு (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தை (மீண்டும்) திருப்பிக் கொண்டார்கள். அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்கள் போலும் என்று நாங்கள் எண்ணினோம்.
பின்னர் “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளட்டும்)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “(பார்க்கிறார்கள்) போலும்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. (“அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்களோ என்று நாங்கள் எண்ணினோம்” என்றே இடம்பெற்றுள்ளது.)
– மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு அதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். மேலும், (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இவ்வாறு மூன்றுமுறை செய்தார்கள். பின்னர் “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹா(த்)திம் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 1847) ➚
நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட மாத்திரத்தில் நபி (ஸல்) அவர்களின் முகமே மாறியது; அதைக் கண்முன் காண்பது போல் அவர்கள் அஞ்சினார்கள். பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட நபியே இவ்வளவு அஞ்சியிருக்க, சாதாரண மனிதரான நாம் நரகத்தை மறந்தே வாழ்வது எவ்வளவு பெரிய அலட்சியம் என்பதை இது உணர்த்துகிறது.
தர்மம் செய்ய பெரிய செல்வம் தேவையில்லை என்பதையும் இதே தருணத்தில் நபி (ஸல்) கற்பித்தார்கள். பேரீச்சம் பழத் துண்டு கூட இல்லாதவர், ஓர் இனிய வார்த்தையாலேனும் தன்னை நரகத்திலிருந்து காக்கலாம் என்பது, சிறு நன்மையையும் அற்பமெனத் தள்ளிவிடக் கூடாது என்பதைக் கற்றுத்தருகிறது.