நபி உறங்கும்போது வந்த வானவர்கள் — “கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது”

ஹதீஸ் சம்பவங்கள்

விருந்துக்கு அழைத்த வீட்டுக்காரரின் உவமை — “அழைப்பை ஏற்றவர் உள்ளே, மறுத்தவர் வெளியே”

جَاءَتْ مَلاَئِكَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ نَائِمٌ، فَقَالَ بَعْضُهُمْ: إِنَّهُ نَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: إِنَّ العَيْنَ نَائِمَةٌ، وَالقَلْبَ يَقْظَانُ، فَقَالُوا: إِنَّ لِصَاحِبِكُمْ هَذَا مَثَلًا، فَاضْرِبُوا لَهُ مَثَلًا، فَقَالَ بَعْضُهُمْ: إِنَّهُ نَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: إِنَّ العَيْنَ نَائِمَةٌ، وَالقَلْبَ يَقْظَانُ، فَقَالُوا: مَثَلُهُ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا، وَجَعَلَ فِيهَا مَأْدُبَةً وَبَعَثَ دَاعِيًا، فَمَنْ أَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنَ المَأْدُبَةِ، وَمَنْ لَمْ يُجِبِ الدَّاعِيَ لَمْ يَدْخُلِ الدَّارَ وَلَمْ يَأْكُلْ مِنَ المَأْدُبَةِ، فَقَالُوا: أَوِّلُوهَا لَهُ يَفْقَهْهَا، فَقَالَ بَعْضُهُمْ: إِنَّهُ نَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: إِنَّ العَيْنَ نَائِمَةٌ، وَالقَلْبَ يَقْظَانُ، فَقَالُوا: فَالدَّارُ الجَنَّةُ، وَالدَّاعِي مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَنْ أَطَاعَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَى مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ عَصَى اللَّهَ، وَمُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْقٌ بَيْنَ النَّاسِ ” تَابَعَهُ قُتَيْبَةُ، عَنْ لَيْثٍ، عَنْ خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ جَابِرٍ، خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் ‘இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்’ என்றார். அதற்கு மற்றொருவர் ‘கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது’ என்று கூறினார். பின்னர் அவர்கள் ‘உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்’ என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ‘இவர் உறங்குகிறாரே!’

என்றார். மற்றொருவர் ‘கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது’ என்றார். பின்னர் அவர்கள் ‘இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவுமில்லை’ என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், ‘இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்’ என்றார்கள்.

அப்போது அவர்களில் ஒருவர் ‘இவர் உறங்குகிறாரே!’ என்று சொல்ல, மற்றொருவர் ‘கண் தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது’ என்றார். அதைத் தொடர்ந்து ‘அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளி முஹம்மத்(ஸல்) அவர்கள்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர் – கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள்’ என்று விளக்கமளித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் ஜாபிர்(ரலி) அவர்கள் ‘(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வெளியேறிவந்து (இந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள்)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)

நூல் – (புகாரி: 7281)

நபி (ஸல்) அவர்கள் உறங்கும் போதே அவர்களது இதயம் விழிப்புடன் இருக்கும் என வானவர்கள் தம்முள் பேசிக் கொண்டதும், அவர்களுக்கு ஒரு உவமையைச் சொல்ல முடிவு செய்தது இந்தச் சம்பவத்தின் அழகு. ஒரு வீட்டைக் கட்டி, விருந்து வைத்து, அழைப்பாளனை அனுப்பிய மனிதரின் உவமை — அழைப்பை ஏற்று உள்ளே சென்றவர் விருந்துண்டார்; மறுத்தவர் வெளியேயே நின்றுவிட்டார். இதை நபிக்கே விளக்கிச் சொல்லச் சொன்னது, வானவர்கள் கூட மனிதர்களுக்கு உண்மையை எளிய கதைகள் மூலம் புரியவைப்பதை விரும்புவதைக் காட்டுகிறது.

அந்த வீடு சொர்க்கம்; அழைப்பாளர் நபி (ஸல்) அவர்கள். நம் ஒவ்வொருவருக்கும் அந்த அழைப்பு வந்திருக்கிறது — ஏற்று உள்ளே செல்வதா, புறக்கணித்து வெளியே நிற்பதா என்பது நம் கையில்தான். அழைப்பை ஏற்பது என்பது வெறும் வார்த்தையளவில் நிற்காமல், நபி காட்டிய வழியில் நடப்பதாகும். இன்று அந்த அழைப்பை நாம் எந்த அளவு நெருக்கமாக ஏற்றிருக்கிறோம் என்பதைத்தான் இந்தச் சம்பவம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.