தொழுகையில் இருந்ததால் பதில் சொல்லாதவர் — நபி (ஸல்) கற்றுத்தந்த பாடம்

ஹதீஸ் சம்பவங்கள்

“பள்ளியிலிருந்து வெளியேறும் முன் மகத்துவமிக்க அத்தியாயத்தை உனக்குக் கற்றுத் தருகிறேன்”

كُنْتُ أُصَلِّي فِي المَسْجِدِ، فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أُجِبْهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ أُصَلِّي، فَقَالَ: ” أَلَمْ يَقُلِ اللَّهُ: {اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} [الأنفال: 24].

ثُمَّ قَالَ لِي: «لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ السُّوَرِ فِي القُرْآنِ، قَبْلَ أَنْ تَخْرُجَ مِنَ المَسْجِدِ».

ثُمَّ أَخَذَ بِيَدِي، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ، قُلْتُ لَهُ: «أَلَمْ تَقُلْ لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي القُرْآنِ»،

قَالَ: {الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ} [الفاتحة: 2] «هِيَ السَّبْعُ المَثَانِي، وَالقُرْآنُ العَظِيمُ الَّذِي أُوتِيتُهُ»

அபூஸயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள. நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின் ), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன், அதற்கு அவர்கள், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்ததூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8-24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டார்கள்.

பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அலஃபாத்திஹா அத்தியாயம்) தான்.

அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் இப்னு முஅல்லா (ரலி)

நூல் – (புகாரி: 4474)

தொழுகையில் இருந்ததே காரணமாகச் சொன்னாலும், நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் வசனத்தையே ஆதாரமாக வைத்துத் திருத்தினார்கள்.

திருத்திய அதே கையால் ஒரு பரிசையும் கொடுத்தார்கள் — நாம் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதும் அந்த ஏழு வசனங்கள்.