தலையை மூடினால் கால் தெரிந்தது — முஸ்அப் (ரலி)க்குக் கிடைத்த ஒற்றைத் துணி
தலைக்கு மேல் அந்தத் துணியையும், கால்களுக்கு மேல் வாசனைப் புல்லையும் இடச் சொன்னார்கள் நபி (ஸல்)
هَاجَرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَبِيلِ اللهِ، نَبْتَغِي وَجْهَ اللهِ، فَوَجَبَ أَجْرُنَا عَلَى اللهِ، فَمِنَّا مَنْ مَضَى لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ شَيْئًا، مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، قُتِلَ يَوْمَ أُحُدٍ، فَلَمْ يُوجَدْ لَهُ شَيْءٌ يُكَفَّنُ فِيهِ إِلَّا نَمِرَةٌ، فَكُنَّا إِذَا وَضَعْنَاهَا عَلَى رَأْسِهِ، خَرَجَتْ رِجْلَاهُ، وَإِذَا وَضَعْنَاهَا عَلَى رِجْلَيْهِ، خَرَجَ رَأْسُهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ضَعُوهَا مِمَّا يَلِي رَأْسَهُ، وَاجْعَلُوا عَلَى رِجْلَيْهِ الْإِذْخِرَ»، وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ، فَهْوَ يَهْدِبُهَا
– وحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، ح وحَدَّثَنَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ الْأَعْمَشِ، بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றோம். எங்களுக்கான பிரதி பலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதி பலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்றுவிட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டார்கள்.
அவருக்கு “கஃபன்” அணிவிக்கக் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்று மட்டுமே (அவருடைய உடைமைகளில்) கிடைத்தது. அதைக்கொண்டு அவரது தலைப் பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியே தெரிந்தது. ஆகவே, அவரது தலைப் பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள்மீது “இத்கிர்” எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். எங்களில் (நாடு துறந்து சென்றதன்) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க் கொண்டிருப்பவர்களும் உள்ளனர்.
அறிவிப்பவர்: கப்பாப் பின் அல்அரத் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 1715) ➚
அல்லாஹ்வின் பாதையில் நாடு துறந்து சென்றவர்களில் சிலர் அதன் பலனை இவ்வுலகில் அனுபவிக்காமலேயே சென்றுவிட்டனர் என்று கப்பாப் (ரலி) நினைவுகூர்கிறார். உஹுதுப் போரில் கொல்லப்பட்ட முஸ்அப் பின் உமைர் (ரலி)க்கு கஃபனாக ஒரு கோடுபோட்ட சிறு துணி மட்டுமே கிடைத்தது; தலையை மூடினால் கால்கள் வெளியே தெரிந்தன, கால்களை மூடினால் தலை வெளியே தெரிந்தது.
ஒரு காலத்தில் நல்ல ஆடைகள் அணிந்திருந்த ஒரு இளைஞரின் கடைசி ஆடை இவ்வளவு சிறியதாக இருந்தது என்பதை நினைத்துப் பாருங்கள் — இவ்வுலகின் வசதிகளையும் அந்தஸ்தையும் தியாகம் செய்து, இறுதி வரை உறுதியாக நின்றதன் அடையாளமே அது. நாம் இழக்கிறோம் என்று நினைக்கும் ஒவ்வொன்றும், அல்லாஹ்விடம் நிச்சயம் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையை இந்தச் சம்பவம் நமக்குள் வளர்க்க வேண்டும்.