தசைகளின் அசாத்திய ஒருங்கிணைப்பு
நாம் தரையில் கிடக்கும் ஒரு பேனாவை எடுப்பது மிக எளிதான விஷயமாகத் தோன்றலாம். ஆனால், அந்த ஒரு நொடி செயலுக்குள் நமது கைகள், விரல்கள் மற்றும் கண்களில் உள்ள நூற்றுக்கணக்கான தசைகள் ஒரே நேரத்தில் மைக்ரோ விநாடி துல்லியத்துடன் இணைந்து செயல்படுகின்றன. இது நமது உடலின் உள்ளே நடக்கும் ஒரு பிரம்மாண்டமான உயிரியல் ரோபோடிக்ஸ் பொறியியல் (Biological Robotics Engineering) அதிசயம் ஆகும்.
நமது உடலில் உள்ள தசைகள் தன்னிச்சையாக இயங்குவதில்லை. அவற்றுக்குத் தலைமை தாங்கி இயக்குவது நமது நரம்பு மண்டலம். நாம் பேனாவை எடுக்க நினைத்தவுடன், நமது பெருமூளையில் உள்ள மோட்டார் கார்டெக்ஸ் (Motor Cortex) பகுதி செயலுக்கான மூலக் கட்டளையைப் பிறப்பிக்கிறது. நமது இரண்டு கை முஷ்டிகளைச் சேர்த்தால் என்ன அளவு இருக்குமோ அந்த அளவுள்ள மூளையின் பின்புறத்தில், ஒரு சிறிய ஆரஞ்சு பழ அளவில் இருக்கும் சிறுமூளை (Cerebellum), அந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. கை எவ்வளவு தூரம் போக வேண்டும், எவ்வளவு வேகமாக நகர வேண்டும் என்பதை இதுவே தீர்மானிக்கிறது. மூளையிலிருந்து புறப்படும் கட்டளைகள், மின்கம்பிகளில் பாயும் மின்னோட்டம் போல அதிவேக மின் சமிக்ஞைகளாக (Action Potentials) தண்டுவடம் வழியாகப் பயணிக்கின்றன.
நமது தலைமுடியை விடப் பல மடங்கு மெல்லிய நுண்ணிய தசை நார்கள் (Muscle Fibers) ஒன்றிணைந்து ஒரு கயிறு போலத் தசையாக உருவாகின்றன. நரம்புகளின் முனையும் தசை நார்களும் சந்திக்கும் இடமே நியூரோமஸ்குலர் ஜங்ஷன் (Neuromuscular Junction) ஆகும். இது வெறும் சில நானோமீட்டர் இடைவெளி கொண்ட ஒரு நுண்ணிய பாலமாகும். கையை மடக்க பைசெப்ஸ் (Biceps) தசை சுருங்கும்போது, பின்னால் உள்ள ட்ரைசெப்ஸ் (Triceps) தசை சரியான அளவில் தளர வேண்டும். சீசா பலகையில் ஒருவர் மேலே போகும்போது மற்றொருவர் கீழே இறங்குவது போல இரண்டும் சமநிலையில் இயங்க வேண்டும்.
நமது மூட்டுகளிலும் தசை நார்களிலும் ப்ரோப்ரியோசெப்டர்கள் (Proprioceptors) எனப்படும் மிகச்சிறிய உணரிகள் (Sensors) உள்ளன. நாம் கண்களை மூடிக்கொண்டாலும் நமது கை எங்கே இருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும் அல்லவா? இந்த உணரிகள் உடலின் நிலையைத் தொடர்ந்து மூளைக்கு அனுப்பி, ஒரு நொடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் இயக்கத்தைச் சீரமைக்கின்றன.
உடலில் உள்ள தசைகள் (Skeletal Muscles) வெறும் சதைப்பகுதி மட்டுமல்ல; அவை மிகச்சிறந்த உயிரியல் ரப்பர் பேண்டுகள் (Biological Elastic Bands) போன்றவை. உடலின் எந்த ஒரு அசைவிற்கும் எலும்புகளோடு இணைந்த இந்தத் தசைகளின் சுருங்கி விரியும் திறனே காரணம். ஒரு தடிமனான கயிற்றை அவிழ்த்தால், உள்ளே பல சிறிய நூலிழைகள் இருப்பதைப் பார்க்கலாம். அதேபோலத்தான் நமது தசைகளும் அமைந்துள்ளன. நமது ஒரு தசைக்குள் ஆயிரக்கணக்கான தசை செல்கள் உள்ளன. ஒரு தசை நாரின் தடிமன் மனித தலைமுடியின் தடிமனுக்கு (சுமார் 100 மைக்ரோமீட்டர்) சமமானது.
ஒவ்வொரு தசை நாருக்குள்ளும் பல நூறு நுண்ணிய உருளை இழைகளான மயோஃபைப்ரில்கள் (Myofibrils) உள்ளன. இவற்றின் அளவு மிகச் சிறியது; ஒரு மில்லிமீட்டருக்குள் சுமார் 1,000 மயோஃபைப்ரில்களை வரிசையாக அடுக்க முடியும். இந்த மயோஃபைப்ரில்களில் அடுத்தடுத்து அடுக்கப்பட்ட சுருங்கும் அலகுகள்தான் சார்கோமியர் (Sarcomere). சார்கோமியரின் உள்ளே ஆக்டின் (Actin) என்ற மெல்லிய புரத இழை மற்றும் மயோசின் (Myosin) என்ற தடித்த புரத இழை என இரண்டு முக்கிய புரதங்கள் உள்ளன.
இரு கைகளின் விரல்களையும் ஒன்றுக்குள் ஒன்றாகக் கோர்த்து இழுப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். நாம் கையை மடக்க மூளை ஒரு மின் சமிக்ஞையை அனுப்புகிறது. அப்போது மயோசின் இழைகளில் உள்ள சிறிய தலைகள், ஆக்டின் இழைகளைப் பிடித்து இழுத்து ஒன்றன் மேல் ஒன்று சறுக்க வைக்கின்றன. இந்தச் சறுக்கும் இயக்கத்தின் காரணமாக சார்கோமியர் நீளம் குறைந்து, முழுத் தசையும் சுருங்குகிறது. இந்த இழைகள் சறுக்குவதற்கும், மீண்டும் பழைய நிலைக்குத் தளருவதற்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. நமது செல்கள் உருவாக்கும் ஏடிபி (ATP – Adenosine Triphosphate) என்ற மூலக்கூறுகளே இந்த ஆற்றலைத் தருகின்றன. நாம் கைக்கு ஒரு பேட்டரி போட்டால் இயங்குவது போல, தசை இயங்க ஏடிபி எரிசக்தியாகச் செயல்படுகிறது.
நாம் கனமான பொருட்களைத் தூக்கும் போதோ அல்லது ஓடும் போதோ, இந்த நுண்ணிய புரத இழைகளில் கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய கிழிசல்கள் ஏற்படுகின்றன. நாம் ஓய்வெடுக்கும் போது, உடல் உணவிலிருந்து பெறும் புரதத்தைப் பயன்படுத்தி அந்தக் காயங்களை முன்பை விட அதிக தடிமனுடன் சரிசெய்கிறது. இந்த செயல்முறைக்கு மஸ்குலர் ஹைப்பர்ட்ரோபி (Muscular Hypertrophy) என்று பெயர். இதனால்தான் தொடர் உடற்பயிற்சி செய்பவர்களின் தசைகள் பெரிதாகவும் வலுவாகவும் மாறுகின்றன.
ஒரு நவீன ரோபோ கையை ஒரு அங்குலம் அசைக்கக் கூடப் பல ஆயிரம் வரிகள் கொண்ட கணினி நிரல்கள் தேவைப்படுகின்றன. ஆனால், ஒரு கிரிக்கெட் வீரர் பந்தை கேட்ச் பிடிக்கும்போதும், ஒரு இசைக்கலைஞர் பியானோ வாசிக்கும்போதும், நமது உடல் இந்த அசாத்தியமான இயக்க ஒருங்கிணைப்பை எவ்விதத் தடுமாற்றமும் இன்றி மிக நேர்த்தியாக நிகழ்த்திக் காட்டுகிறது. இத்தகைய நுட்பமான அமைப்புகளையும், அவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளையும் படைத்த இறைவனின் அளப்பரிய ஆற்றலையும் ஞானத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.