“சொர்க்கத்தின் கருவூலம்” — அபூமூஸா (ரலி)க்குக் கிடைத்த வார்த்தை

ஹதீஸ் சம்பவங்கள்

“உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒன்று”

لَمَّا غَزَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ، أَوْ قَالَ: لَمَّا تَوَجَّهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَشْرَفَ النَّاسُ عَلَى وَادٍ، فَرَفَعُوا أَصْوَاتَهُمْ بِالتَّكْبِيرِ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ، إِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا، إِنَّكُمْ تَدْعُونَ سَمِيعًا قَرِيبًا وَهُوَ مَعَكُمْ»،

وَأَنَا خَلْفَ دَابَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعَنِي وَأَنَا أَقُولُ: لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَقَالَ لِي: «يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ». قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَلاَ أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ كَنْزٍ مِنْ كُنُوزِ الجَنَّةِ» قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، فَدَاكَ أَبِي وَأُمِّي، قَالَ: «لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ»

அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பிய போது… மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியோன்), “லாஇலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று குரல்களை உயர்த்திக் கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்’ என்று கூறினார்கள். அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு, “லாஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது) என்று கூறுவதைக் கேட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இப்னு கைஸே!’ என்று அழைத்தார்கள். “கூறுங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!” என்று நான் பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்” என்று கூறினார்கள். நான், “சரி (கட்டாயம் கூறுங்கள்) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், (அந்த வார்த்தை,) “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” தான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

நூல் – (புகாரி: 4205)

பயணக் கூட்டம் முழுவதும் சத்தமிட்டுத் தக்பீர் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், அல்லாஹ் செவிடனும் தொலைவிலுள்ளவனும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் நினைவூட்டியது இன்றும் நமக்குப் பொருந்தும் பாடம். இறைவனை நினைப்பது சத்தத்திலல்ல, மனதின் நேர்மையிலேயே இருக்கிறது.

அந்தக் கூட்டத்திலேயே நபி (ஸல்) அவர்கள் அபூமூஸா (ரலி) ஒருவரையே தனியாக அழைத்து ஒரு விலைமதிப்பற்ற வார்த்தையைக் கற்றுக் கொடுத்தார்கள். சொந்த முயற்சியையும் திறமையையும் மட்டும் நம்பாமல், எல்லாவற்றிலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்கக் கற்றுத் தரும் அந்தச் சிறு வாக்கியம், இன்றும் நம் நாவில் என்றும் இருக்க வேண்டியது.