சுவையும் வாசனையும் இணையும் அதிசயம்
நாம் சாக்லேட் அல்லது சுடச்சுட பீட்சாவைச் சாப்பிடும்போது கிடைக்கும் ‘சுவை’ (flavor) என்பது நாக்கு மட்டும் தரும் உணர்வு அல்ல. அது நாக்கும் மூக்கும் இணைந்து தரும் ஒரு ஒருங்கிணைந்த அனுபவம் ஆகும்.
உங்கள் நாக்கைப் பார்த்தால், அதன்மேல் சிறிய புள்ளிகள் போன்ற அமைப்புகள் தெரியும். இவை பேபிலா (papillae) எனப்படும். இந்த பேபிலாக்கள் ஒவ்வொன்றும் ஒரு கடுகு விதையை விடச் சிறியவை. ஒரு பேபிலாவுக்குள் பல நூறு சுவை மொட்டுகள் (taste buds) ஒளிந்திருக்கின்றன. நுண்ணோக்கியில் (microscope) மட்டுமே பார்க்க முடிகிற இந்த சுவை மொட்டுகள், தலைமுடியின் தடிமனைப் போன்ற மிக நுண்ணிய அமைப்பாகும். இந்தச் சுவை மொட்டுகளில் உள்ள சுவை உணரிகள் (gustatory receptors) இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, மற்றும் உமாமி (umami – அசைவம் அல்லது சீஸ் போன்ற சுவை) ஆகிய 5 அடிப்படைச் சுவைகளை மட்டுமே கண்டறிகின்றன.
நாக்கால் 5 சுவைகளை மட்டுமே உணர முடியும் என்றால், ஸ்ட்ராபெர்ரிக்கும் மாம்பழத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் எப்படி உணர்கிறோம்? இங்குதான் மூக்கு முக்கியப் பங்காற்றுகிறது. நாம் உணவை மெல்லும்போது, அதிலிருந்து வெளியாகும் நறுமணக் காற்று தொண்டையின் வழியாக மூக்கின் உட்பகுதிக்குச் செல்கிறது. இதற்கு ‘ரெட்ரோ-நேசல் ஆல்ஃபாக்ஷன்’ (retro-nasal olfaction) என்று பெயர். அங்குள்ள தபால் தலை அளவே உள்ள சிறிய பகுதியில், பல லட்சம் வாசனை உணரிகள் (olfactory receptors) உள்ளன. அவை உணவின் மண மூலக்கூறுகளைக் கண்டறிந்து மூளைக்குச் செய்தியனுப்புகின்றன.
நாக்கு அனுப்பும் சுவைச் சிக்னல்களும், மூக்கு அனுப்பும் வாசனைச் சிக்னல்களும் மூளையின் ‘ஆர்பிட்டோஃப்ரண்டல் கார்டெக்ஸ்’ (orbitofrontal cortex) என்ற பகுதிக்குச் செல்கின்றன. ஒரு திரையரங்கில் படம் பார்க்கும்போது வீடியோ மட்டும் இருந்து ஆடியோ இல்லையென்றால் படம் முழுமையடையாது. அதேபோல, நாக்கு தருவது அடிப்படைச் சுவை, மூக்கு தருவது வாசனை. இரண்டும் மூளையில் இணையும்போதுதான் முழுமையான ‘ஃபிளேவர்’ உருவாகிறது. உணவின் சுவையில் சுமார் 80% பங்கை வாசனையே நிர்ணயிக்கிறது. இதனால்தான் சளி பிடித்து மூக்கு அடைக்கும்போது, நாம் உண்ணும் உணவின் உண்மையான சுவையை உணர முடிவதில்லை.
நாம் ஒரு வாய் உணவை மென்ற அடுத்த நொடிக்குள், ஆயிரக்கணக்கான வேதி மூலக்கூறுகளைப் பிரித்தாய்ந்து இந்த ‘மல்டி-சென்சரி இன்டக்ரேஷன்’ (multi-sensory integration) பணியை நமது மூளை நொடிப்பொழுதில் செய்து முடிப்பது இயற்கையின் மாபெரும் பொறியியல் அற்புதம் ஆகும்.
இப்படி மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், அதன் செயல்பாடுகளும், அவை ஒன்றிணைந்து செயல்படும் விதமும் இறைவனின் அளவற்ற ஞானத்தையும், படைப்பாற்றலையும் நமக்கு உணர்த்துகின்றன. இந்த நுட்பமான அமைப்புகளைப் படைத்து, சீராக இயங்கச் செய்யும் இறைவனின் வல்லமையை எண்ணிப் பார்ப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.