சிங்கங்களும் புலிகளும் புல் தின்னுமா?

அறிவியல் உண்மைகள்

சிங்கங்களும் புலிகளும் புல் தின்னுமா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ‘பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது’ என்ற பழமொழி இருந்தாலும், சிங்கங்களும் புலிகளும் புல் தின்பது உண்மைதான். இது ஒரு தற்செயலான நிகழ்வோ அல்லது போலிச் செய்தியோ அல்ல.

சிங்கங்கள் மற்றும் புலிகள் உட்பட பெரும்பாலான பூனை இன விலங்குகள் சில நேரங்களில் புல் தின்னும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. உயிரியல் பூங்காவிலோ அல்லது வனப்பகுதியிலோ சிங்கம் புல் தின்னுவதைப் பார்த்தால், அதற்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை என்று பலர் நினைக்கலாம். ஆனால், இது தவறான கருத்து. விலங்குகள் புல் தின்னுவது இயற்கையான ஒரு செயல்முறையாகும்.

சிங்கம், புலி, சிறுத்தை மற்றும் பூனை குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் ‘ஒப்லிகேட் கார்னிவோர்ஸ்’ (obligate carnivores) ஆகும். அதாவது, அவற்றின் உடலமைப்பு முழுமையாக மாமிச உணவுக்கே ஏற்ற வகையில் உருவாகியுள்ளது. அவை சைவ உணவை உணவாக உட்கொள்வதில்லை. இருந்தாலும், அவ்வப்போது புல் தின்னும் பழக்கம் அவற்றுக்கு உள்ளது.

மனிதர்கள் செரிமானத்தை மேம்படுத்த நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதைப் போல, சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் புல் ஒரு நார்ச்சத்து மூலமாகச் செயல்படுகிறது. புல் நார்ச்சத்து நிறைந்தது. அவை தினமும் புல் தின்னுவதில்லை. ஆனால், குறிப்பாக மழைக்காலங்களில் சில நேரங்களில் புல் தின்னும். இதனால் குடல்களின் இயக்கம் சுறுசுறுப்பாகி, செரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது.

சில நேரங்களில் தொண்டையில் ஏற்படும் அசௌகரியத்தைப் போக்கவோ அல்லது வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்யவோ அவை புல் தின்னும். இதன் மூலம் செரிமானமாகாத அதிகப்படியான உணவை வாந்தியாக வெளியேற்றவும் உதவுகிறது. ஆசியச் சிங்கங்கள் மற்றும் பிற மாமிச விலங்குகள் அடிக்கடி புல் தின்னும். ஆனால் அவை அதை உணவாகவோ அல்லது ஊட்டச்சத்துக்காகவோ தின்னுவதில்லை.

மாமிசம் உண்ணும் விலங்குகளின் உணவில் இறைச்சியின் அளவு அதிகமாக இருப்பதால், அவற்றின் உணவில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். எனவே, உடலில் நார்ச்சத்து குறைவாக இருக்கும் சில நேரங்களில், அவை புல் போன்ற நார்ச்சத்து கொண்ட பொருட்களை கூடுதல் உணவாக உட்கொள்கின்றன. குறிப்பாக இந்தப் பருவத்தில் சிங்கங்கள் அதிகமாக புல் தின்னும். ஏனெனில், அவற்றின் உடலுக்கு அதிக நார்ச்சத்து தேவைப்படுகிறது. அது செரிமானக் கோளாறுகளைத் தணிக்க உதவுகிறது.

மேலும், சில நேரங்களில் அதிக அளவில் புல் தின்னுவதால் சிங்கங்களுக்கு குமட்டல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவை வாந்தி எடுக்கவும் நேரிடுகிறது. நாய்கள் கூட புல் தின்னுவதற்கான காரணம், புல் அவற்றின் தொண்டைக்குள் ஆழமாகச் செல்வதுதான். இதனால் அவற்றுக்கு அசௌகரியம் ஏற்பட்டு வாந்தி வருகிறது. எனவே, சிங்கங்களும் புலிகளும் வயிற்றுக் கோளாறு அல்லது செரிமானப் பிரச்னை ஏற்பட்டபோது புல் தின்னுகின்றன. வாந்தி எடுப்பதற்காகவும் அவை புல் தின்னும். அவற்றின் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் இதன் மூலம் வெளியேறுகின்றன.

ஒரு மாமிச விலங்கு வேட்டையாடி இறைச்சி உண்ணும்போது, அந்த இரை விலங்கின் தோல் மற்றும் முடியும் அதன் உடலுக்குள் செல்கின்றன. தாவர உணவு உண்ணும் விலங்குகளின் குளம்புகள் போன்ற கடினமான பகுதிகளும் உட்கொள்ளப்படலாம். அவற்றைச் செரிக்க உதவுவதற்காகவே இந்த விலங்குகள் புல் தின்னுகின்றன. புல்லில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. மனிதர்களுக்கும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் எவ்வாறு பயனளிக்கிறதோ, அதேபோல் இதுவும் செயல்படுகிறது.

மாமிச விலங்குகள் பெரும்பாலும் சேறு படிந்த புல்லையும் தின்னும். அதன் மூலம் அவற்றுக்கு உப்புச்சத்தும் கிடைக்கிறது. புல் சிங்கங்களின் குடலில் இருக்கும் ஒட்டுண்ணிகள் மற்றும் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதோடு, அவற்றின் வயிற்றையும் சுத்தப்படுத்துகிறது. எனவே, சிங்கங்கள் புல் தின்னுவது பசியால் அல்ல; தங்களின் செரிமான அமைப்பை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும் இயற்கையான தேவையால்தான்.

இறைவன் படைத்த ஒவ்வொரு உயிரினமும் அதன் உடலியல் தேவைகளுக்கு ஏற்ப இயற்கையாகவே செயல்படுகின்றன. இந்த நுட்பமான அமைப்புகள் அனைத்தும் இறைவனின் அளவற்ற ஞானத்தையும், படைப்பின் ஒழுங்கையும் நமக்கு உணர்த்துகின்றன.

ஆதாரம்: BBC தமிழ்