கோபத்துடன் மேடையேறிய நபி — “என் தந்தை யார்?” எனக் கேட்ட மனிதர்
“இன்று சொர்க்கமும் நரகமும் எனக்குக் காட்டப்பட்டன” என்ற நபி, உமர் (ரலி) அமைதிப்படுத்திய கணம்
سَأَلُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَحْفَوْهُ بِالْمَسْأَلَةِ، فَصَعِدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ المِنْبَرَ فَقَالَ: «لاَ تَسْأَلُونِي عَنْ شَيْءٍ إِلَّا بَيَّنْتُ لَكُمْ» فَجَعَلْتُ أَنْظُرُ يَمِينًا وَشِمَالًا، فَإِذَا كُلُّ رَجُلٍ لاَفٌّ رَأْسَهُ فِي ثَوْبِهِ يَبْكِي، فَأَنْشَأَ رَجُلٌ، كَانَ إِذَا لاَحَى يُدْعَى إِلَى غَيْرِ أَبِيهِ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ مَنْ أَبِي؟ فَقَالَ: «أَبُوكَ حُذَافَةُ» ثُمَّ أَنْشَأَ عُمَرُ فَقَالَ: رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، نَعُوذُ بِاللَّهِ مِنْ سُوءِ الفِتَنِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا رَأَيْتُ فِي الخَيْرِ وَالشَّرِّ كَاليَوْمِ قَطُّ، إِنَّهُ صُوِّرَتْ لِي الجَنَّةُ وَالنَّارُ، حَتَّى رَأَيْتُهُمَا دُونَ الحَائِطِ» فَكَانَ قَتَادَةُ يَذْكُرُ هَذَا الحَدِيثَ عِنْدَ هَذِهِ الآيَةِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ} [المائدة: 101]
அனஸ்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்கள் (சிலர்) நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் சொற்பொழிவு மேடையின் மீதேறி, ‘(இன்று) நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப்பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப் போவதில்லை’ என்று (கோபத்துடன்) கூறினார்கள். உடனே நான் வலப் பக்கமும் இடப்பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொருவரும் தம் ஆடையால் தலையைச் சற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள்.
அப்போது ஒருவர் பேசத் தொடங்கினார். அம்மனிதர் (பிறருடன்) சண்டை சச்சரவு செய்யும்போது அவரின் தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என அழைக்கப்பட்டு வந்தார். எனவே அவர், ‘அல்லாஹ்வின் நபியே! என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தந்தை ஹுதாஃபா’ என்றார்கள். பிறகு உமர்(ரலி) அவர்கள் ‘நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத்(ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். குழப்பங்களின் தீங்கிலிருந்து (எங்களை) பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோருகிறோம்’ என்று கூறினார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் ஒருபோதும் நான் கண்டதில்லை. எனக்கு (இன்று) சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்தச் சுவருக்கு அப்பால் கண்டேன்’ என்றார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த நபிமொழி, ‘இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைக் குறித்துக் கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்’ எனும் (அல்குர்ஆன்: 05:101)➚வது) இறைவசனத்தை ஓதும்போது நினைவு கூரப்படுவது வழக்கம். 28
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல் – (புகாரி: 7089) ➚
தமக்குப் பிடிக்காத கேள்விகளை வற்புறுத்திக் கேட்ட தோழர்கள் மீது கோபம் கொண்ட நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மேடையேறி, எதைக் கேட்டாலும் தெளிவுபடுத்துவதாக அறிவித்ததும், கூடியிருந்த அனைவரும் அஞ்சி அழத் தொடங்கினார்கள். அந்த பதற்றமான நேரத்தில் ஒரு மனிதர் தன் தந்தை யாரென்று கேட்டு, நபி பதிலளித்தார்; பிறகு உமர் (ரலி) எழுந்து அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் நபியையும் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டதாக அறிவித்து, குழப்பங்களிலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். ஒரு வார்த்தையால் அந்தச் சூழல் அமைதியடைந்தது.
கேள்வி கேட்பதிலேயே ஆபத்து இருக்கும் தருணங்கள் உண்டு — பதில் நமக்குப் பிடிக்காமல் போகலாம், அல்லது நம்மையே சிக்கலில் மாட்டிவிடலாம். உமர் (ரலி) அந்நேரத்தில் செய்தது கேள்வி கேட்பதல்ல, ஏற்றுக்கொள்வதுதான் — தன் விசுவாசத்தை உறுதிப்படுத்தி, மேலும் குழப்பம் வராமல் தடுத்தது. நம் வாழ்விலும் தேவையற்ற கேள்விகளைத் துருவி ஆராய்வதைவிட, இருப்பதை நன்றியுடன் ஏற்று முன்னேறுவதே பல நேரங்களில் ஞானமாக இருக்கும்.