கைபர் போரில் “ஷஹீத்” என அழைக்கப்பட்டவர் — “இல்லை, நரகில் கண்டேன்” என்ற நபி

ஹதீஸ் சம்பவங்கள்

“கோடுபோட்ட போர்வையை எடுத்த காரணத்தால் அவரை நரகில் கண்டேன்” என்ற நபி (ஸல்)

لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ، أَقْبَلَ نَفَرٌ مِنْ صَحَابَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: فُلَانٌ شَهِيدٌ، فُلَانٌ شَهِيدٌ، حَتَّى مَرُّوا عَلَى رَجُلٍ، فَقَالُوا: فُلَانٌ شَهِيدٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلَّا، إِنِّي رَأَيْتُهُ فِي النَّارِ فِي بُرْدَةٍ غَلَّهَا – أَوْ عَبَاءَةٍ -» ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا ابْنَ الْخَطَّابِ، اذْهَبْ فَنَادِ فِي النَّاسِ، أَنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا الْمُؤْمِنُونَ»، قَالَ: فَخَرَجْتُ فَنَادَيْتُ: أَلَا إِنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا الْمُؤْمِنُونَ

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் “இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்” என்று கூறிக்கொண்டேவந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி “இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக்கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)” என்றார்கள்.

பிறகு (என்னிடம்) “கத்தாபின் புதல்வரே! நீங்கள் சென்று, “இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று மக்களுக்கு அறிவித்துவிடுங்கள்!” என்றார்கள். அவ்வாறே நானும் சென்று, “அறிந்துகொள்ளுங்கள்! இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று (மக்களிடையே) அறிவித்தேன். இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

நூல் – (முஸ்லிம்: 182)

போரில் இறந்துவிட்டால் மட்டும் போதும், சொர்க்கம் நிச்சயம் என்று நினைக்கும் தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்ன திருத்தம் இது. வெளியே தியாகியாகத் தெரிந்த ஒருவர், பொதுச் செல்வத்தில் ஒரு சிறிய பங்கை மறைத்து வைத்திருந்த காரணத்தால் நரகில் இருந்ததைக் கண்டதாக நபி அறிவித்தார்கள். மனிதர்கள் பார்ப்பது வெளித் தோற்றத்தை; அல்லாஹ் பார்ப்பது உள்ளிருக்கும் நேர்மையை.

நாம் ஒருவரின் தொழுகையையோ, சேவையையோ, தியாகத்தையோ பார்த்து அவர் நிச்சயம் நல்லவர் என முடிவு கட்டிவிடுகிறோம். ஆனால் ஒரு சிறு நேர்மையின்மை கூட எல்லாவற்றையும் மாசுபடுத்திவிடும் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது. நம் சொந்த வாழ்விலும் — வேலையிலோ, பணத்திலோ, பொறுப்பிலோ — சிறிய நேர்மையின்மைகளைக்கூட நாம் இலேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.