கப்ரில் வானவர்கள் கேட்கும் கேள்வி — “இந்த மனிதரைப் பற்றி என்ன கருதினாய்?”
“நீ அறிந்திருக்கவுமில்லை; ஓதி விளங்கியதுமில்லை”
إِنَّ العَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ، وَإِنَّهُ [ص:99] لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، أَتَاهُ مَلَكَانِ فَيُقْعِدَانِهِ، فَيَقُولاَنِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ لِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَّا المُؤْمِنُ، فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، فَيُقَالُ لَهُ: انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ قَدْ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الجَنَّةِ، فَيَرَاهُمَا جَمِيعًا – قَالَ قَتَادَةُ: وَذُكِرَ لَنَا: أَنَّهُ يُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ، ثُمَّ رَجَعَ إِلَى حَدِيثِ أَنَسٍ – قَالَ: وَأَمَّا المُنَافِقُ وَالكَافِرُ فَيُقَالُ لَهُ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: لاَ أَدْرِي كُنْتُ أَقُولُ مَا يَقُولُ النَّاسُ، فَيُقَالُ: لاَ دَرَيْتَ وَلاَ تَلَيْتَ، وَيُضْرَبُ بِمَطَارِقَ مِنْ حَدِيدٍ ضَرْبَةً، فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَنْ يَلِيهِ غَيْرَ الثَّقَلَيْنِ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான்.
அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…’அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்’ என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்… நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’
என அவனிடம் கேட்கப்படும்போது ‘எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவான். உடனே ‘நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை’ என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.’ என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல் – (புகாரி: 1374) ➚
கப்ரில் கேட்கப்படும் கேள்வி மிக எளிமையானது, ஆனால் அதன் பின்னணி மிகவும் ஆழமானது. எத்தனை தொழுதோம், எவ்வளவு சம்பாதித்தோம் என்பதல்ல, நபி (ஸல்) அவர்களைப் பற்றி, அதாவது அவர்கள் கொண்டுவந்த வழிகாட்டுதலை நம் வாழ்நாளில் என்னவாக ஏற்றுக்கொண்டோம் என்பதுதான் அந்தத் தருணத்தில் கேட்கப்படும். வெளிப்படையான சடங்குகள் அல்ல, உள்ளுக்குள் உறுதியாக இருந்த நம்பிக்கையே அப்போது வெளிப்படும்.
நிராகரிப்பவனின் பதில் நம்மை மிகவும் எச்சரிக்க வேண்டும் — தனக்குச் சொந்தமாக எதுவும் தெரியாமல், மற்றவர்கள் சொன்னதையே தானும் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததாக அவன் ஒப்புக்கொள்கிறான். இது சொந்த நம்பிக்கை இல்லாமல், சுற்றியுள்ளவர்களைப் பார்த்துப் பழகிய ஒரு நம்பிக்கையின் அடையாளம். இன்று நாம் நம் நம்பிக்கையை ஏன், எதற்காக என்று புரிந்துகொண்டு ஏற்றிருக்கிறோமா, அல்லது வெறும் சூழலின் காரணமாகவே பின்பற்றுகிறோமா என்பதை இப்போதே சிந்திக்க வேண்டும். இரவல் வாங்கிய நம்பிக்கை, தேவைப்படும் தருணத்திலேயே கைவிட்டுவிடும்.