கடன்காரருக்கு அவகாசம் கொடுத்த மனிதனிடம் வானவர்கள் கேட்ட கேள்வி

ஹதீஸ் சம்பவங்கள்

“அவனின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்!”

تَلَقَّتِ المَلاَئِكَةُ رُوحَ رَجُلٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ، قَالُوا: أَعَمِلْتَ مِنَ الخَيْرِ شَيْئًا؟ قَالَ: كُنْتُ آمُرُ فِتْيَانِي أَنْ يُنْظِرُوا وَيَتَجَاوَزُوا عَنِ المُوسِرِ، قَالَ: قَالَ: فَتَجَاوَزُوا عَنْهُ “،

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ أَبُو مَالِكٍ، عَنْ رِبْعِيٍّ: «كُنْتُ أُيَسِّرُ عَلَى المُوسِرِ، وَأُنْظِرُ المُعْسِرَ»، وَتَابَعَهُ شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ رِبْعِيٍّ،

وَقَالَ أَبُو عَوَانَةَ: عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ رِبْعِيٍّ: «أُنْظِرُ المُوسِرَ، وَأَتَجَاوَزُ عَنِ المُعْسِرِ»،

وَقَالَ نُعَيْمُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ رِبْعِيٍّ: «فَأَقْبَلُ مِنَ المُوسِرِ، وَأَتَجَاوَزُ عَنِ المُعْسِرِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் ‘நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?’ எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், ‘வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் என்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!’ என்று கூறினார். உடனே, ‘அவரின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல்விட்டு விடுங்கள்!’

என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!’ அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) மற்றோர் அறிவிப்பில், ‘சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மிருதுவாக நடப்பவனாகவும் இருந்தேன்!’ என்று அவர் கூறினார் என இடம் பெற்றுள்ளது. மற்றோர் அறிவிப்பில், ‘வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும் வந்தேன்!’ என்று அவர் கூறினார் என இடம் பெற்றுள்ளது. இன்னொரு அறிவிப்பில், ‘வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்!’ என்று அவர் கூறினார் என இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல் – (புகாரி: 2077)

மரணத் தருவாயில் ஒரு மனிதனிடம் வானவர்கள் “ஏதேனும் நன்மை செய்திருக்கிறீரா?” என்று கேட்டபோது, அவரால் சொல்ல முடிந்தது ஒரே ஒரு விஷயம்தான் — கடன் வாங்கியவர்களுக்கு வசதி ஏற்படும்வரை பொறுமையாகக் காத்திருக்கும்படியும், சிரமப்படுபவரின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விடும்படியும் தம் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். இந்த ஒரு பழக்கத்திற்காகவே அல்லாஹ் அவரை முழுமையாக மன்னித்தான்.

பெரிய தர்மமோ நீண்ட வழிபாடோ அல்ல, அன்றாட வணிகத்தில் காட்டிய கருணையே அவருக்கு மன்னிப்பைப் பெற்றுத் தந்தது. நம்மிடம் கடன்பட்டிருப்பவரிடமும் நமக்குக் கடன் தரவேண்டியவரிடமும் நாம் காட்டும் நடத்தை, சிறியதாகத் தோன்றினாலும், இறைவனிடம் பெரிய நிறையுடையதாக இருக்கலாம் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.