“என்னிடம் உள்ளதிலேயே உயர்ந்தது” — உமர் (ரலி) வக்ஃபு செய்த பேரீச்சந் தோட்டம்
விற்கக் கூடாது; அன்பளிப்பாகத் தரக் கூடாது; வாரிசுரிமையும் கிடையாது
أَنَّ عُمَرَ تَصَدَّقَ بِمَالٍ لَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ يُقَالُ لَهُ ثَمْغٌ وَكَانَ نَخْلًا، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي اسْتَفَدْتُ مَالًا وَهُوَ عِنْدِي نَفِيسٌ، فَأَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَصَدَّقْ بِأَصْلِهِ، لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ»، فَتَصَدَّقَ بِهِ عُمَرُ، فَصَدَقَتُهُ تِلْكَ فِي سَبِيلِ اللَّهِ وَفِي الرِّقَابِ وَالمَسَاكِينِ وَالضَّيْفِ وَابْنِ السَّبِيلِ وَلِذِي القُرْبَى، وَلاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ مِنْهُ بِالْمَعْرُوفِ، أَوْ يُوكِلَ صَدِيقَهُ غَيْرَ مُتَمَوِّلٍ بِهِ
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) ‘தம்ஃக்’ என்றழைக்கப்பட்ட தம் சொத்து ஒன்றை அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தருமம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந் தோட்டமாக இருந்தது. அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு செல்வத்தைப் பெற்றுள்ளேன். அது என்னிடம் (இருப்பவற்றிலேயே) உயர் தரமானதாகும். எனவே, அதை தருமம் செய்து விட விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அதன் நிலத்தை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாகவும் தரக்கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது; அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதை தருமம் செய்து விடு’ என்று கூறினார்கள்.
எனவே, உமர்(ரலி) அதை தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள். அவர்களின் அந்த தருமம் (வக்ஃபு) அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. ‘நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல் தம் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதில் குற்றமில்லை’ என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல் – (புகாரி: 2764) ➚
தர்மம் செய்ய உமர் (ரலி) தேர்ந்தெடுத்தது தமக்கு வேண்டாத ஒன்றை அல்ல; தம்மிடம் இருந்தவற்றிலேயே உயர்ந்ததை. நாம் தர்மம் செய்யும்போது எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதே நம் நேர்மையின் அளவுகோல்.
நிலம் யாருக்கும் போகாமல் அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனை, ஒரு முறை செய்த தர்மத்தை நூற்றாண்டுகள் ஓடும் நீரூற்றாக மாற்றியது. இதுவே வக்ஃபின் அடிப்படை.