உமர் (ரலி) பிரேதத்தின் அருகில் அலீ (ரலி) இப்னு அப்பாஸிடம் சொன்னது
“நானும் அபூபக்ரும் உமரும்” — நபி (ஸல்) அடிக்கடி சொன்ன மூன்று பெயர்கள்
وُضِعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَلَى سَرِيرِهِ، فَتَكَنَّفَهُ النَّاسُ يَدْعُونَ وَيُثْنُونَ وَيُصَلُّونَ عَلَيْهِ، قَبْلَ أَنْ يُرْفَعَ، وَأَنَا فِيهِمْ، قَالَ فَلَمْ يَرُعْنِي إِلَّا بِرَجُلٍ قَدْ أَخَذَ بِمَنْكِبِي مِنْ وَرَائِي، فَالْتَفَتُّ إِلَيْهِ فَإِذَا هُوَ عَلِيٌّ، فَتَرَحَّمَ عَلَى عُمَرَ، وَقَالَ: مَا خَلَّفْتَ أَحَدًا أَحَبَّ إِلَيَّ أَنْ أَلْقَى اللهَ بِمِثْلِ عَمَلِهِ مِنْكَ، وَايْمُ اللهِ إِنْ كُنْتُ لَأَظُنُّ أَنْ يَجْعَلَكَ اللهُ مَعَ صَاحِبَيْكَ، وَذَاكَ أَنِّي كُنْتُ أُكَثِّرُ أَسْمَعُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «جِئْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَدَخَلْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَخَرَجْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، فَإِنْ كُنْتُ لَأَرْجُو، أَوْ لَأَظُنُّ، أَنْ يَجْعَلَكَ اللهُ مَعَهُمَا»
– وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ فِي هَذَا الْإِسْنَادِ بِمِثْلِهِ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப் பட்டிருந்தார்கள். அப்போது மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பிரார்த்திக்கவும் பாராட்டவும் செய்தனர். பிரேதம் எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா தொழுகை) தொழுதனர். அவர்களிடையே நானும் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் எனக்குப் பின்னாலிருந்து என் தோளைப் பிடித்து என்னைத் திடுக்கிடச் செய்தார். (யாரென்று) நான் திரும்பிப் பார்த்தபோது, அவர் அலீ (ரலி) அவர்கள்தான்.
அவர்கள் “உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, “(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத்தக்கவர் யாரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள்தான் அதற்குத் தகுதியான மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை உங்களுடைய இரு தோழர்களுடன்தான் அல்லாஹ் இருக்கச் செய்வான் (அதாவது நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகியோருடன் நீங்கள் அடக்கம் செய்யப்படுவீர்கள்) என்றே நான் எண்ணியிருந்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும் உமரும் வந்தோம்”. என்றும், “நானும் அபூபக்ரும் உமரும் உள்ளே சென்றோம்” என்றும், “நானும் அபூபக்ரும் உமரும் வெளியில் புறப்பட்டோம்” என்றும் சொல்வதை நான் அதிகமாகச் செவியுற்றிருக்கிறேன். அதனால்தான் உங்களை உங்கள் இரு தோழர்களுடன்தான் (அல்லாஹ்) அடங்கச் செய்வான் என்று நான் எதிர்பார்க்கிறேன் அல்லது எண்ணுகிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 4760) ➚
உமர் (ரலி)யின் உடலுக்கு அருகிலேயே நின்று, அவர்கள் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படையாகச் சொன்னார்கள் அலீ (ரலி). ஒருவர் நம்முடன் இருக்கும்போதே அவரைப் பற்றிய நல்ல எண்ணத்தை நாம் வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டும்; இறந்த பின் சொல்வதைவிட அதுவே மேலானது.
அல்லாஹ்வின் தூதருடன் நெருங்கிய தொடர்பில் வாழ்ந்த மூவரின் அந்த நட்பு, மறுமையிலும் தொடர வேண்டும் என்று அலீ (ரலி) விரும்பினார்கள். நல்லவர்களுடன் கொண்ட தொடர்பை நாமும் இங்கு மட்டும் நினைக்காமல், மறுமையிலும் தொடர விரும்ப வேண்டும்.