இஹ்ராமில் பேன் தொல்லைப்பட்ட கஅப் பின் உஜ்ரா (ரலி)விடம் நபி (ஸல்) கேட்ட கேள்வி

ஹதீஸ் சம்பவங்கள்

“உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?”

أَتَى عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْحُدَيْبِيَةِ وَأَنَا أُوقِدُ تَحْتَ – قَالَ الْقَوَارِيرِيُّ: قِدْرٍ لِي، وقَالَ أَبُو الرَّبِيعِ: بُرْمَةٍ لِي – وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي، فَقَالَ: «أَيُؤْذِيكَ هَوَامُّ رَأْسِكَ؟» قَالَ قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَاحْلِقْ، وَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، أَوْ انْسُكْ نَسِيكَةً» قَالَ أَيُّوبُ: فَلَا أَدْرِي بِأَيِّ ذَلِكَ بَدَأَ

– حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، فِي هَذَا الْإِسْنَادِ بِمِثْلِهِ

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா உடன்பாடு நடந்த காலகட்டத்தில் (உம்ராவிற்காக நான் “இஹ்ராம்” கட்டியிருந்த போது), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் எனது (கற்)பாத்திரத்தின் கீழே நெருப்பை மூட்டி (சமைத்து)க் கொண்டிருந்தேன். (அப்போது எனது தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்துகொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?”

என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்று கூறினேன். அதற்கு, “உனது தலையை மழித்துக்கொள். பின்பு மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு! (இதுவே “இஹ்ராம்” கட்டிய நிலையில் தலையை மழித்ததற்கான பரிகாரமாகும்)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மூன்று நோன்பு நோற்றல், ஆறு ஏழைகளுக்கு உணவளித்தல், குர்பானி கொடுத்தல் ஆகிய இம்மூன்றில்) எதை முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)

நூல் – (முஸ்லிம்: 2267)

தலையில் பேன் தொல்லை போன்ற சிறிய ஒரு விஷயத்தைக் கூட நபி (ஸல்) அலட்சியமாக விடவில்லை; கஅப் (ரலி)யின் முகத்தில் பேன்கள் உதிர்வதைக் கண்டதுமே அக்கறையுடன் விசாரித்தார்கள். மற்றவர்களின் சிறு சிரமங்களைக் கூடக் கவனிக்கும் இந்தப் பண்பு நமக்கும் வேண்டும்.

ஒரே ஒரு கடினமான வழியை மட்டும் நபி (ஸல்) கஅப் (ரலி)க்குச் சொல்லவில்லை; மூன்று வழிகளைத் தந்து, அவரவர் சூழ்நிலைக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்கள். மார்க்கம் சிரமத்தைத் தராமல் எளிமையைத்தான் விரும்புகிறது என்பதற்கு இதுவே சான்று.