இஸ்ரவேலரிடம் இல்லாத சலுகை — உயிரீட்டுத் தொகை இந்தச் சமுதாயத்திற்கு

ஹதீஸ் சம்பவங்கள்

பழிவாங்கல் மட்டுமே இருந்த இடத்தில் மன்னிப்புக்கு ஒரு வழி திறந்தது

«كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ القِصَاصُ، وَلَمْ تَكُنْ فِيهِمُ الدِّيَةُ». فَقَالَ اللَّهُ تَعَالَى لِهَذِهِ الأُمَّةِ: {كُتِبَ عَلَيْكُمُ القِصَاصُ فِي القَتْلَى الحُرُّ بِالحُرِّ وَالعَبْدُ بِالعَبْدِ، وَالأُنْثَى بِالأُنْثَى، فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ} [البقرة: 178] «فَالعَفْوُ أَنْ يَقْبَلَ الدِّيَةَ فِي العَمْدِ» {فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ} [البقرة: 178] «يَتَّبِعُ بِالْمَعْرُوفِ وَيُؤَدِّي بِإِحْسَانٍ» {ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ} [البقرة: 178] «مِمَّا كُتِبَ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ» {فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ} [البقرة: 178] «قَتَلَ بَعْدَ قَبُولِ الدِّيَةِ»

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் இஸ்ரவேலர்களிடையே பழிக்குப்பழி வாங்கும் (கிஸாஸ்) சட்டம் (நடை முறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக் கொண்டு கொலை செய்தவனை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. எனவே, அல்லாஹ் (முஹம்மத்(ஸல்) அவர்களின்) இந்தச் சமுதாயத்திற்கு, ‘கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ணுக்கு பதிலாகவும் (பழிவாங்கப்படுவர்.

கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட கொலையுண்டவனின் உறவினரான) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால் நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகை) நிறைவேற்றிட வேண்டும்’ என்று கூறுகிறான். ‘மன்னிப்பளித்தல்’ (அஃப்வ்) என்பது வேண்டுமென்றே செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்லமுறையில் அதனைக் கொலையாளி செலுத்திட வேண்டும். ‘இது உங்களுடைய இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையுமாகும்’ அதாவது உங்களுக்கு முன்பிருந்தவர்(களான பனூ இஸ்ராயீல்)களின் மீது கடைமையாக்கப்பட்டிருந்ததை விட இது இலேசாகும்.

இதற்கும் அப்பால் எவன் வரம்பு மீறுகிறானோ அவனுக்கு – அதாவது எவன் உயிரீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின்பும் (பழிக்குப் பழியாகக்) கொலை செய்கிறானோ அவனுக்கு – துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்: 02:178)➚ இதை முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) அறிவித்தார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் – (புகாரி: 4498)

இஸ்ரவேலர்களிடம் பழிக்குப்பழி மட்டுமே இருந்தது; மன்னித்து இழப்பீடு பெறும் வழி இருக்கவில்லை. இந்தச் சமுதாயத்திற்கு அல்லாஹ் அந்த வழியைத் திறந்தான் — இது சட்டமல்ல, சலுகை.

“இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த இலகுவாக்கலும் அருளுமாகும்” என்று குர்ஆனே அதைப் பெயரிட்டுச் சொல்கிறது. நீதி வேண்டுமா, மன்னிப்பு வேண்டுமா என்பதை இழந்த குடும்பமே தீர்மானிக்கிறது.

ஆனால் சலுகையை ஏற்றபின் மீறுவதற்குக் கடும் எச்சரிக்கை. அருள் என்பது தளர்வு அல்ல — அதை ஏற்றபின் வரும் பொறுப்பு முன்பைவிடப் பெரியது.