இரு கப்ருகளைக் கடந்து சென்ற நபி (ஸல்) பேரீச்ச மட்டையைப் பிளந்து நட்டது ஏன்?
“ஒரு பெரிய பாவத்திற்காக அல்ல, இவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள்”
مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ، فَقَالَ: «إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ البَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ» ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً، فَشَقَّهَا نِصْفَيْنِ، فَغَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: «لَعَلَّهُ يُخَفِّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا»
وَقَالَ مُحَمَّدُ بْنُ المُثَنَّى، وَحَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا مِثْلَهُ: «يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ»
நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது, “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்” என்று கூறினார்கள். பிறகு ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள்.
அது பற்றி மக்கள், நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்டபோது “இவ்விரு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் வரை அவர்களின் வேதனை குறைக்கப்படலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) புகாரீ இமாம் கூறுகிறார்: இந்த ஹதீஸை முஹம்மத் பின் முஸன்னா அவர்கள் வகீஃ அவர்களிடமிருந்து வகீஃ —> அஃமஷ் .. என்று மற்றொரு அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்.
அதில் அஃமஷ் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றதாக இடம்பெற்றுள்ளது. மேலும் ஹதீஸின் வார்த்தையில் சிறிது மாற்றம் உள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் – (புகாரி: 218) ➚
இந்த இருவரும் பெரிய குற்றத்திற்காக அல்ல, மக்கள் சாதாரணமாகக் கருதும் இரு விஷயங்களுக்காகவே தண்டிக்கப்படுகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்; சிறுநீரிலிருந்து உடலை மறைத்துக் கவனமாக இல்லாதது, மற்றும் புறம் பேசித் திரிந்தது. இவை இரண்டும் நாம் அலட்சியமாக நடந்துகொள்ளும், இது ஒன்றும் பெரிய பாவம் இல்லையே என்று ஒதுக்கிவிடும் விஷயங்கள். ஆனால் தொடர்ந்து அலட்சியமாக இருக்கும் சிறு தவறுகளே, பெரிய பாவங்களைப் போலவே கனமாக மாறிவிடுகின்றன என்பதை இந்தச் சம்பவம் நமக்குக் காட்டுகிறது.
தவறைச் சுட்டிக்காட்டியபின்பும் நபி (ஸல்) அவர்கள் அந்த இரு கப்ருகளின் மீதும் பசுமையான மட்டைத் துண்டுகளை நட்டு, வேதனை குறையட்டும் என்று விரும்பினார்கள். தவறை உணர்த்துவதும் கருணை காட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதை அவர்கள் நமக்குக் காட்டுகிறார்கள். நம் சுத்தத்தையும் நம் நாவையும் தினமும் கவனமாகக் காத்துக்கொள்வோம்; ஏனெனில் இவை இரண்டும்தான் மிக எளிதாக நம் கவனத்திலிருந்து தப்பிச் சென்றுவிடக்கூடியவை.