இதயம் ஓய்வெடுக்குமா?
நம் இதயம் எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பதுபோல் தோன்றும். ஆனால், அது உண்மை இல்லை. எந்த உறுப்பாக இருந்தாலும், அது நன்றாகச் செயல்பட ஓய்வு தேவை.
இதயத்திற்கும் இந்த விதி பொருந்தும். இதயம் சுருங்கி விரியும்போது, ஒவ்வொரு முறையும் அரை நொடிப் பொழுதை ஓய்வுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது. இது ஒரு விந்தையான வழிமுறை.
இரவில் தூங்கும்போது, இதயம் தனது வேலைத்திறனைக் குறைத்து ஓய்வெடுக்கிறது. அப்போது, உடலில் உள்ள மிக நுண்ணிய இரத்தக் குழாய்களுக்குத் தேவையான இரத்தத்தை அனுப்புவதை ஓரளவு குறைத்துக்கொள்கிறது.
உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் இயங்குவதற்கு இரத்தம் மற்றும் பிராணவாயு (ஆக்சிஜன்) தேவை. இதயம் இயங்குவதற்குத் தேவையான இரத்தத்தை, தனது அறைகளில் ஓடும் தூய்மையான இரத்தத்தில் இருந்து நேரடியாகப் பெறுவதில்லை.
மாறாக, உடலின் மிகப்பெரிய இரத்தக் குழாயான மகாதமனியில் (aorta) இருந்து முதல் கிளைகளாகப் பிரியும் இதயத் தமனிகள் (coronary arteries) வழியாகத் தனக்குத் தேவையான இரத்தத்தைப் பெறுகிறது. மகாதமனியில் இருந்து மூன்று இதயத் தமனிகள் பிரிகின்றன.
இந்த மூன்று இரத்தக் குழாய்கள்தான் இதயம் இயங்குவதற்குத் தேவையான உயிர்வளி, இரத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
இறைவன் தனது படைப்பில் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒரு தனித்துவமான அமைப்பை வழங்கியுள்ளான். இதயம் ஓய்வெடுக்கும் இந்த நுட்பமான வழிமுறையும் அவனது அளவற்ற ஞானத்தையும், ஆற்றலையும் காட்டுகிறது.
ஆதாரம்: மாலைமலர்