அண்டார்டிகாவின் பனிப்பாறைக்கு அடியில் ஒரு புதிய உலகம் உள்ளதா?
அண்டார்டிகா (Antarctica) கண்டத்தில், பனிப்பாறைகளுக்கு அடியில் ஆறுகளும் ஏரிகளும் கொண்ட ஒரு புதிய உலகத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு குழுவினர் அண்டார்டிகாவின் ரோஸ் பனிப்பாறை மண்டலத்தில் ஆராய்ச்சி செய்தபோது இதைக் கண்டறிந்தனர்.
ரோஸ் பனிப்பாறை மண்டலம் என்பது அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றாகும். இது ரோஸ் கடல் பகுதியில் மிதக்கும் ஒரு பனிப்படுகை (ice shelf) ஆகும். இந்தக் குழுவினர் ஆராய்ச்சி செய்தபோது, கடலுக்கு அடியில் ஒரு பெரிய குகையைக் கண்டனர். இது ஒரு தேவாலயத்தின் கூர்மையான கோபுரம் தலைகீழாக இருப்பது போலத் தோன்றியது.
இந்தக் குகைக்கு அடியில், பனித்தரைக்கு 500 மீட்டர் ஆழத்தில், புதிய உயிரினங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அவர்களின் ஆராய்ச்சிக் கருவியில் கணுக்காலிகள் (arthropods), பன்முகக்காலிகள் (amphipods), பெரிய மற்றும் சிறிய நண்டுகள், மற்றும் சிறிய பூச்சிகள் கூட்டம் கூட்டமாகப் பதிவாகின.
இது ஒரு ஆற்றின் முகத்துவாரமாக (estuary) இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆறு பல கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். பனிப்பாறையைத் துளையிட்டு ஆய்வுக்கருவிகளை உள்ளே அனுப்பியபோது, கேமராவில் திடீரென உயிரினங்கள் தென்பட்டன.
இந்தக் கண்டுபிடிப்பு, முழுவதும் பனிக்கட்டியால் சூழப்பட்ட அண்டார்டிகா போன்ற பகுதிகளில் மற்ற உலகத்தைப் போன்ற உயிரினங்கள் வாழ முடியுமா என்ற நீண்டகால ஆராய்ச்சிக்கு ஒரு முக்கிய திறவுகோலாக அமைந்துள்ளது. இந்த உயிரினங்கள் புதிய ஒரு இயற்கைச் சூழல் மண்டலத்தின் பகுதியாக இருக்கின்றன.
நியூசிலாந்து நாட்டின் தேசிய நீரியல்-வளிமண்டல ஆய்வு நிறுவனம் (NIWA), வெலிங்டன் (Victoria University of Wellington), ஆக்லாந்து (University of Auckland), மற்றும் ஒட்டாகோ (University of Otago) பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தக் குழுவின் தலைவரான ஹூ ஹோர்கான் (Huw Horgan) என்பவர், செயற்கைக்கோள் மூலம் ரோஸ் பனிப்படுகையை ஆராய்ந்தபோது ஒரு பள்ளத்தைக் கண்டார். அதன் பிறகு அந்தப் பகுதிக்குச் சென்று கருவிகள் மூலம் கூடுதல் தரவுகளை உறுதிப்படுத்தினர். இந்த கடலடி முகத்துவாரம் பருவநிலை மாற்றத்தால் பனிப்படுகை உருகுவதில் என்ன பங்கு வகிக்கிறது என்பதை ஆராய்வதே அவர்களின் அடுத்தகட்ட வேலை.
இறைவன் எவ்வளவு பெரியவன்! அவன் படைத்த இந்த உலகில், பனிப்பாறைகளுக்கு அடியிலும் ஒரு புதிய உலகம், அதில் வாழும் உயிரினங்கள் என எத்தனையோ ஆச்சரியங்கள் மறைந்து கிடக்கின்றன. அவனது ஆற்றலையும் ஞானத்தையும் எண்ணிப் பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது.
ஆதாரம்: விகடன்